திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது.
Share
நடராசா லோகதயாளன்
திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுவந்த புத்தர்சிலை திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை சிவபுரி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில், வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுவந்த புத்தர்சிலை அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் சிறியளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இங்கே கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டது. இவ்விடத்திலேயே தற்போது பாரிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு பெரிய அளவிளான புத்தர்சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதுபோன்ற பௌத்த மயமாக்கலின் மூலம் தமிழர் பகுதிகளில் உள்ள தமிழ் மக்களுடைய காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், சிறிய புத்தர் சிலை வைப்பதில் தொடங்கி அது விகாரையாக மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் வரையிலான செயற்பாட்டை அரச அனுசரணையுடன் சிலர் செய்து வருவதாகவும் இதற்கு அதனுடன் சம்பந்தப்பட்ட அரச நிர்வாகமும் துணை போவதோடு புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு திறப்புவிழா இடம்பெறும் வரையில் வாய் மூடி மௌனிகளாக ஒளிந்திருக்கும் அரசியல்வாதிகள் இனி ஆர்ப்பாட்டம், மக்கள் போராட்டம் என ஏமாற்று அரசியலில் ஈடுபடுவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் இந்தக் கட்டுமானம் தொடரபில் கனடா உதயனில் 2024-05-04 அன்று செயதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.