LOADING

Type to search

கனடா அரசியல்

“மலையக தமிழ் இலக்கியம்”. ‘மலையகா சிறப்பிதழும்

Share

சிறப்புரை வி.தேவராஜ்

கனடாவில் கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிவரும் “தேடகம்” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற “மலையகப் பெண்களின் கதைகள்”; என்ற நூலின் வெளியீட்டு விழா 14-04-2024 அன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையகப் பெண்களின் கதைகள் மேற்படி விழாவில் எழுத்தாளர்கள் அன்பு, யாழினி, நிரூபா, மற்றும் மீரா பாரதி ஆகியோரும் உரையாற்றினார்கள்.

வீரகேசரிப்; பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ. தேவராஜ் சிறப்புரையாற்றினார். எழுத்தாளரும்; பேராசிரியையுமான கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய வீ தேவராஜ் அவர்களின் உரையின் முழுவடிவம் இங்;கு இரண்டு பகுதிகளாக பிரசுரமாகின்றது.

“மலையகா” என்ற பெயர்

“இன்றைய இந்த வெளியீட்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள சிறு கதைத் தொகுப்புக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர் குறித்து என்னுள் எழுந்துள்ள வினாவினை அவையின் முன் வைக்கின்றேன்.

இந்த நூலுக்கு “மலையகா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்று புரியவில்லை.

இன்று இலங்கையில் மலையக மக்களின் இன அடையாளம் குறித்து பெரிதாகப் பேசப்படுகின்றது. தற்பொழுது இன அடையாளம் குறித்த கருத்தாடல்கள் சூடு பிடித்துள்ள இன்றைய நிலையில் “மலையகா” என்ற புதிய இன அடையாளத்துடன் சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

“மலையகா”; என்பது இடப்பெயராகவா? அல்லது இனத்துவத்தை குறிக்கும் பெயராகவா? சூட்டப்பட்டுள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

மலையகத் தமிழ் இலக்கியம்

இன்றைய இந்த நிகழ்வில் “மலையகத் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளேன்.

மலையக இலக்கிய குறித்து முழுமையாக நான் பேசப் போவதில்லை. மலையகத்தின் எனது அனுபவம் பேசப்படாத மலையக இலக்கிய செல்நெறி குறித்து பேசுவதாகவே எனது இந்த உரை அமையும்.

அந்தவகையில் மலையக இலக்கியம் என்பது 200 வருடகால மலையக மக்களின் வாழ்வியலில் அந்த மக்கள் முகம் கொடுத்த இரு நூற்றாண்டின் அதாவது 20 தசாப்தகால துன்பியலின் வரலாராகும். காலனித்தவத்தின் கோர முகத்தையும் அதன் அடக்கு ஒடுக்கு முறைகளையும் மீறி பிரசவித்ததே மலையக இலக்கியமாகும்..

“மலையகம் 200”

“மலையகம் 200” இன் ஒரு அடையாளமாக இன்றைய இந்த நிகழ்வூ அமைந்துள்ளது.
“மலையகம் 200” இன் நிகழ்வுகள் காலனித்தவத்தின் பிடியில் இருந்து மலையகம் விடுதலையான சுதந்திர நிகழ்வோ என இன்று பலர் கருதலாம். உண்மையில் “மலையகம் 200” மலையகத்தின் விடுதலையைப் பறைசாற்றும் நிகழ்வு அல்ல.

ஏனெனில் இன்றும் மலையகமக்கள் அரைகாலனித்துவகட்டமைப்புக்களுடனும்அதனுடன் இரட்டைச்சகோதரனாக இணைந்துள்ள இனவாத தீ சுவாலைகளுக்குள்ளும் பயணிக்கின்றனர் என்பதை இங்கு பதிவிட விரும்புகின்றேன்.

அன்று வெள்ளைத் தோல் துரைத்தனததிற்குள் சிக்கி இருந்த மலையகம் இன்று கறுத்த தோல் துரைத்தனத்திற்குள்ளும் அதனுடன் இணைந்து பயணிக்கின்ற இனவாதத் தீ நாக்குகளுக்குள்ளும் சிக்கிக் கிடக்கின்றது. அந்தவகையில் 1.5 மில்லியன் மலையக மக்களின் தலை விதி தீர்க்கமான இன்னொரு கட்டத்திற்குள் நுழைய உள்ளது என்று கூறுவதே பொருந்தும்.

மலையக அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களுக்காக பேச மறுக்கின்ற அல்லது மூடி மறைக்கின்ற மலையகம் நோக்கிய ஒரு பெரிய ஆபத்தை இன்றைய இளம் கவிஞாகள் பேசுகின்றனர்.

அதற்கு உதாரணமாக ஏப்ரல் மாத வெளியீடாக வந்துள்ள “தாய் வீடு” இதழில் மல்லிகைப்பூச்சந்தி திலகர் எழுதியூள்ள கட்டுரையில் இருந்து உதாரணத்தைக் காட்ட முடியூம்.

“மலையகத்திற்கோர் மனு” என்ற தலைப்பில் இரத்தினபுரி மாவட்டைத்தைச் சேர்ந்த காவத்தை கிருபா வின் கவிதை இவ்வாறு பேசுகின்றது.

“……இன்றோ….
கருக்கலைப்பிலோர்
இனவழிப்பு
தமிழன் மட்டுமா?
தமிழும்தான்”…

என்ற இந்த வரிகள் “மலையகம் 200” இன் அடுத்த சவாலாக இருக்கப் போகின்றது.

இன்னும் ஒரு இளந் தலைமுறையினைச் சேர்ந்த கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை சார்ந்த இரா.சுலக்ஷனா தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்.

⦁ 1961 ஆம் ஆண்டு தினகரன் இதழில் பிரசுரமாகிய ஒரு கூடைக் கொழுந்து, கால மாற்றத்திற்கு ஏற்ப சமுக மாற்றங்கள் நிகழாத, மலையக மக்கள் அவர்தம் வாழ்வியலின் குறியீடாக அமைந்து, இற்றைவரை அவர்தம் வாழ்வியலில் நிலவும் நிலையை, அச்சொட்டாகப் பிரதிபலித்துகாட்டுகிறது.

“மாற்றமின்றித் தொடரும் மலையகத்தின் மாற்றத்தை” நோக்கிய குரலாகவே காவத்தை கிருபா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக இரா.சுலக்ஷனா போன்ரோரது குரல்கள் அமைந்துள்ளன.
மறைந்த ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களின் தீர்க்கதரிசனம்.

2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின் அவ்வேளையயில் மன்னார் மறைமாவட்ட ஆயராக இருந்த மறைந்த ராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்களை வீரகேசரிக்காக நேர்காணல் செய்த போது “முள்ளிவாய்க்கால் பேரழிவைவிட மிக மோசமான பேரழிவை தமிழ் மக்கள் இனிவரும் காலங்களில் சந்திக்க உள்ளனர்” என்று தெரிவித்தார். அது தற்போது நிதர்சனமாகியுள்ளது. இதே பாதைக்குள் மலையகமும் “மலையகம் 200” நிகழ்வுகளுடன் பிரவேசிக்க உள்ளது என்பதை இன்றைய இந்த நிகழ்வில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
இந்த ஒரு பின்னணியுடன்; எனது தலைப்புக்கள் நுழைகின்றேன்.

1823 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து மலையகம் நோக்கிய குடிப் பெயர்வு.

1823 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து இலங்கை நோக்கி பெருந்தோட்டப் பொருளாதார எழுச்சிக்கும் வளர்ச்சிக்குமாக தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்ட காலகட்டத்துடன் மலையக இலக்கியம் ஆரம்பிபிக்கின்றது.

1823 ஆம் ஆண்டில் இலங்கையில் காலடி எடுத்து வைத்த தமிழக மக்கள் தமக்கு வழங்கப்பட்ட ஆசை வார்த்தைகளும் வாக்குறுதிகளும் தமக்கு சுபீட்சத்தையும் வளமான வாழ்வையூம் வழங்கும் என்ற எதிர் பார்ப்புடனேயே இலங்கைத் தீவில் வந்திறங்கினர்.

ஆனால் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் ஆசை வார்த்தைகளும் தாம் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்த போதே கடலுக்குள் வீசப்பட்டதை உணர்ந்தனர். எனவே இந்த இரு நூற்றாண்டு கால மலையக இலக்கியம் 1823 ஆண்டுடன் ஆரம்பிக்கின்றது என்ற எடுகோல் முன் வைக்கப்படுகின்றது.

கண்டி மன்னரான சிறி விக்ரம ராஜசிங்கன் காலத்தில் தமிழ் இலக்கிய பாரம்பரியம் ஒன்று இருந்துள்ளது. இதனை மலையக இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவரும் மலையக இலக்கிய ஆய்வாளருமான சாரல்நாடன் மலையக இலக்கிய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

⦁ இலங்கை மண்ணில் 19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தோட்டப்புற வாழ்க்கையும் அதற்கு முற்பட்ட கண்டி மன்னன் காலத்தினதும் கருவாப்பட்டைக் காலத்தினதும் வாழ்க்கையில் எழுந்த இலக்கிய வடிவங்கள் காணக்கிடைக்கவில்லை என்று சாரல்நாடன் தனது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

⦁ இந்த உண்மையால்தான் இன்று அவைகளைத் தேடிக் கொள்வதில் சிரமப்படுகின்றோம். இலங்கையில் கடைசி மன்னனாகக் கொள்ளப்படும் ராஜசிங்கன் பற்றிய அக்கறையோ அவர் காலத்துக் காவியமான “சின்ன முத்து” கதை குறித்த அக்கறையோ நமக்கு இல்லாததால் அந்தக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் பறி கொடுத்து விட்டோம். இதனை தனியார் நூலகங்களிலும் விகாரைகளிலும் சுவடித் திணைக்களங்களிலும் தேடி அலைகின்றோம் என கூறுகின்றார்.

⦁ உண்மையில் கடைசி கண்டி அரசன் 1815 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட போது அவரும் அவருடைய குடும்பமும் வேலூருக்கு நாடு கடத்தப்பட்டனர்.என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அவரது பரம்பரையினர் தமிழர்களாகவும் சிங்களவர்களாகவும் குருநாகல பகுதியை அண்டிய பிரதேசங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கடைசி கண்டி மன்னனனின் நினைவு தினத்தை இன்றும் அவர்கள் ஒன்று கூடி அநுஸ்டித்து வருகின்றனா.; இந்தப் பரம்பரையைச் சேர்ந்த ரமேஸ் என்ற சுதந்திர ஊடகவியலாளர் கடந்த வருடம் காலமானார். இந்தக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டால் பல தகவல்களைப் பெறக் கூடியதாக இருக்கும்.
அடுத்ததாக தமிழக இலக்கிய பாரம்பரியத்துடன் தமது இலக்கிய உறவு மற்றும் பிணைப்பு பற்றிப் பேசுவது. இந்த உறவு மலையக மக்களின் இரத்தத்துடன் கலந்துவிட்ட உணர்வு பூர்வமான விடயமாகும்.

அதே வேளையில் இலங்கையில் இலங்கைத் தமிழர்களை மையமாகக் கொண்டு செழுமையான தமிழ் இலக்கிய பாரம்பரியம் உள்ளது.

ஆனால் இந்த இலக்கிய பாரம்பரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில்தான் மலையக இலக்கியம் தோற்றம் பெற்றுள்ளது.

மொத்தத்தில் கூறுவதாயின் மலையக இலக்கியம் என்பது மலையகத்துக்கே உரிய தனித்துவமான இலக்கியப் பாரம்பரியமாக பர்ணமித்ததுள்ளது.

கடைசி கண்டி மன்னர் காலத்து இலக்கியத்துடன் மலையக இலக்கியம் தொடர்புபட்டதல்ல. ஈழத்து இலக்கிய பாரம்பரியத்தில் இருந்தும் மலையக இலக்கியம் வேறுபட்டது.
அது போல் தமிழக பாரம்பரிய பண்பாட்டு உணர்வுகள் மக்களின் மனங்களில் இருந்த போதும் மலையக இலக்கியம் தானே பாதை வெட்டி தனித்துவமாகப் பயணிக்கத் தொடங்கியதே மலையக இலக்கியமாகும்.

பிரதேச இலக்கியமாகவே நோக்கப்பட்டது.

எனினும் ஈழத்து இலக்கியப் பரப்பில் மலையக இலக்கியம் அண்மைக் காலம் வரை பிரதேச இலக்கியம் என்ற வரையரைக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது. தற்போதுதான் இந்த நிலை மாற்றத்துக்குள்ளாகி ஈழத்து தமிழ் தேசிய இலக்கியத்தின் ஒரு அங்கமாக மலையக இலக்கியம் நோக்கப்படுகின்றது.

பேராசிரியர் கா.சிவத்தம்பி

எனவேதான் பேராசிரியர் கா.சிவத்தம்பி சேர் அவர்கள்
“மலையக இலக்கியம் என்பது தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ள அதே சமயம் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பிரிக்க முடியாத மிக முக்கிய கூறாகவும் அமைந்து காணப்படுகின்றது” என்று குறிப்பிடும் அவர் “மலையக இலக்கியத்தினை புறக்கணித்தோ அல்லது ஒதுக்கி விட்டோ ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முனைவது பூரணத்துவமுடைய வரலாறு எழுதும் முயற்சியாக அமையாது” என்று பதிவிட்டுள்ளார்.
மலையக இலக்கியம் பற்றிய ஆய்வின் போது காணப்படுகின்ற சிக்கல்கள் பற்றி ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

1. மலையக பிரதேச இலக்கியவாதிகள் பற்றி முழுமையான விபரப்பட்டியலோ தகவல்களோ இல்லை.
2. மலையக எழுத்தாளர்களின் படைப்புகளில் அனேகமானவை நூலுரு பெறவில்லை.
மூத்த எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள் கூட இதுவரை நூலுருப் பெறவில்லை.
3. மலையக இலக்கியம் தொடர்பாக சேகரித்து வைத்திருந்த பல ஆக்கங்கள் ஆய்வுகள் என்பன மலையகத்தில் இடம் பெற்ற இனவன்முறைகளின் போது அழிந்து விட்டன.
4. மலையக கலை இலக்கியம் தொடர்பாக சேகரித்து வைத்துள்ள பத்திரிகை துணுக்குகளைத் தேடிப் பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
5. மலையக படைப்புகள் எழுத்தாளர்களின் விபரங்கள் உள்ளிட்ட ஆவண காப்பகம் ஒன்றில்லை.
6.. மலையக இலக்கிய வரலாறு பற்றிய பூரணத்துவமான ஆய்வு நூல் ஒன்று இதுவரை காலமும் எழுதப் படவில்லை.
7. பேராதெனிய கல்கலைக்கழகத்தில் கலாநிதி துரைமனோகரன் கலாநிதி அருணாசலம் போன்ற விரிவுரையாளர்களின் ஊக்குவிப்பாலும் வழிகாட்டுதலிலும் மாணவர்கள் தமது பட்டப்படிப்புக்காக மலையக இலக்கியம் குறித்து ஆய்வூகளை மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். இத்தகைய ஆய்வுகள் நூலுருப் பெறவேண்டும் அல்லது இந்த ஆய்வுகள் குறித்த தகவல்கள் வெளிக் கொண்டுவரப்படல் வேண்டும்.

தமிழக கிராமங்களை மலையகத்தில் காணலாம்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான ஒரு விடயத்தை பதிவிடுதல் பொருத்தமென நினைக்கின்றேன். தமிழகத்தில் இருந்து மக்கள் குடிபெயர்ந்தபோது தனி நபர்களாக படகுகளிலோ அல்லது கப்பல்களிலோ ஏறி இலங்கைக்கு வரவில்லை. கிராமம் கிராமமாகவே கப்பலேறினர்.
அநத வகையில் மலையகத்தில் இந்த மக்களின் குடியேற்றத்தைப் பார்த்தால் தமிழக கிராமங்களை அப்படியே பெயர்த்து மலையகத்தில் பதித்துவிட்ட அமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்தக் கிராமக் குடிப் பெயர்வு தமிழக கிராமங்களின் பண்பாட்டு பாரம்பரியங்களை அப்படியே மலையகத்தில் புதிய சூழலுக்குள்ளும் தமக்கிடையிலான உறவகளின் மூலமும் காப்பாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

மலையக மக்களின் படைப்புக்களை நோக்குகின்ற போது இலக்கியப் படைப்புக்கள் அம் மக்கள் வாழத் தலைப்பட்ட சூழலில் பிறந்தவைகளாக இருந்த போதும் அதன் வேர்கள் தமிழக கிராமங்களில் இருந்து ஊற்றெடுக்கின்றன என்பதை அவதானிக்கலாம்.

ஏனெனில் தமிழகத்தில் இருந்து இலங்கை நோக்கி குடிபெயர்ந்த போது தாம் பிறந்த மண்ணின் கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களையும் தம்முடன் அணைத்து இணைத்து எடுத்து வந்துள்ளனர். எனதோன் மலையக மக்களின் ஆரம்பகால கலை இலக்கிய வெளிப்பாடுகளாக கதைப் பாடல்கள் – நாட்டார் கதைகள் – நாட்டார் பாடல்கள் வடிவில் காணப்படுகின்றன.

“திண்ணை இலக்கிய மரபு”

இந்த இலக்கிய பாரம்பரியம் மலையகத்தின்புதிய சூழலுக்குள் பிரவாகித்த போது தமது பாரம்பரிய இலக்கிய இதிகாசங்களையும் காப்பாற்றிக் கொண்டனர்.

குறிப்பாக “இராமாயணம”; “மகாபாரதம்” போன்ற இதிகாசங்ளும் “ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி” – “இராஜாதேசிங்கு” – “அல்லி அரசாணி மாலை” – “நளமகாராஜன்” – “அரிச்சந்திரன் வனவாசம”; – “மதுரைவீரன”; – “கட்டபொம்மன்” – “நல்லதங்காள”; – “விக்கிரமாதித்தன”; முதலிய கதைகளும் “மதுரைவீரன”; – “அரிச்சுனன் தவசு” – “பொன்னர் சங்கர”; – “காமன் கூத்து” முதலிய கூத்துகளும் அவை சார்ந்த பாடல்களும் இவை தவிர்ந்த “தாலாட்டு” – “ஒப்பாரி” – “மாரியம்மன்” “தாலாட்டு” போன்றவையும் அமைந்து காணப்படுகின்றன. உண்மையில் இந்தப் பாரம்பரிய இலக்கியங்கள் திண்ணை இலக்கியங்களாக பேணப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.

மலையகத் தோட்டப் பகுதிகளில் மேற் கூறிய இதிகாசங்களும் கதைகளும் 1983 வரை திண்ணை இலக்கியங்களாக தொடர்ந்தன.

உண்மையில் இந்த இதிகாசங்களையும் கதைகளையும் சிறு வயதிலேயே தோட்ட லயத்து திண்ணைப் பாரம்பரியத்துக் கூடாகவே நான் கற்றுக் கொண்டேன் என்பதை இங்கு பதிவிட விரும்புகின்றேன்.

அதேபோல் சிறுவர்களை அமர்த்தி கதை கூறுதல் என்பது தோட்டங்களில் வழமையான நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் நிலாக் காலங்களில் நடைபெறும். தோட்டத்து லயன் வாசல்களில் தாய்மாhகள்; ஒன்று கூடி தமது பிள்ளைகளுக்குக் கதை கூறுவார்கள்.
தமிழக யாத்திரிகர்கள் வருகை.

ஆரம்ப காலங்களில் மலையகத்தில் வசதி படைத்தவர்களின் வீடுகளுக்கு (பெரிய கங்காணி செல்வந்தர்கள்) தமிழகத்திலிருந்து சில யாத்திரிகர்கள் கவிஞர்கள் புலவர்கள் வந்துபாடி பரிசு பெற்றும் சென்றுள்ளனர்.

இவை குறித்து காலஞ்சென்ற கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட துறையில் பாண்டித்தியம் பெற்றவர்கள். பாரதம் இராமாயணம் பாடும் புலவர்கள்; திருப்புகழ் கவிராயர் காவடிச் சிந்துப்பாடகர்கள் தியாகராஜர் கீர்த்தனங்களை இசைக்கும் சங்கீத வித்துவான்கள் ஆகியோர் தமது யாத்திரைக் காலங்களில் பெரிய வீடுகளுக்குச் சென்று பாடி சன்மானம் பெற்றுப் போவதுண்டு. இவர்கள் வருகை இலக்கிய உணர்வை வளர்த்தது. அந்த காலத்தில் சினிமா இல்லை. மலைநாட்டில் சில முக்கிய பட்டினங்களில் நாடகங்கள் நடந்தன. “லங்கா தகனம”; “இராமாயணம்” “சத்தியவான் சாவித்திரி” ஆகிய நாடகங்கள் பிரசித்தி பெற்றவை.

இவ்வாறான சூழலில் மக்கள் குழுமியிருந்து அப்பாடல்களை இரசிப்பது இயல்பான ஒன்றாகும். இதன் காரணமாக தென்னிந்தியத் தமிழ் கிராம பின்னணியை சார்ந்த நாட்டார் கதைப்பாடல்களின் தாக்கம் தொடர்ந்தும் இடம் பெற்றன. இவை தவிர இம்மக்களின் மத வழிபாட்டு நிகழ்வுகளின் போதும் ஏனைய சமுதாயம் சார்ந்த சடங்குகளின் போதும் இப்பாடல்கள் பாடப்பெற்றன.

மலையக நாட்டார் பாடல்கள்.

மலையகத்தில் கிராமியப் பாடல்கள் மக்களின் மிகக் கடினமான உழைப்பு மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்கு ஒடுக்கு முறைகள் மற்றும் அர்த்தம் எதுவும் இல்லாத வகையில் மேலிருந்தோர் ஈவிரக்கமற்ற முறையில் மக்களை நடத்திய விதம் போன்றவற்றை கருப் பொருளாகக் கொண்டிருந்தன.

மலையக நாட்டார் பாடல்களின் தாயகமாக தென்னிந்தியா இருந்த போதிலும் அவை மலையக சூழ்நிலைக்கேற்றவகையில் புதிய வடிவம் பெற்று விளங்குவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக பின்வரும் பாடல்களை ஒப்பு நோக்கலாம்.

“ஏத்தமடி தேவிகுளம்
எறக்கமடி மூணாறு
தூரமடி நைனக்காடு
தொடந்துவாடி நடந்து போவோம்..”

இப்பாடலில் இடம்பெறுகின்ற தேவிகுளம் மூணாறு நைனக்காடு ஆகியன தென்னிந்தியாவில் காணப்பட்ட ஊர் பெயர்களாகும். இப்பாடல் மலையக சூழலில் இவ்வாறு பரிமாணம் அடைந்து காணப்படுகின்றது.

“ஏத்தமடி பெத்துராசி
ஏறக்கமடி ராசாத்தோட்டம்
தூரமடி தொப்பித் தோட்டம்
தொடந்து வாடி நடந்து போவோம்”

⦁ இப்பாடலில் இடம்பெறுகின்ற பெத்துராசி ராசாத் தோட்டம் தொப்பித் தோட்டம் முதலிய சொற்கள் ஊர் பெயர்களாகும். அவ்வகையில் நோக்குகின்ற போது மலையக நாட்டார் பாடல்களில் தென்னிந்தியாவின் செல்வாக்கு காணப்படுகின்ற அதேசமயம் அவை மலையக சூழலுக்குக்கேற்ப புதிய வடிவம் பெற்றிருப்பதனையும் காண முடிகின்றது.
⦁ வறுமை வரட்சி சுரண்டல் சாதி அடிப்டையிலான அடக்கு முறைகள்; காரணமாக தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வரும் போது அவர்களின் உணர்வுகள் இவ்வாறாக வெளிப்படுகின்றது.

“வாடை யடிக்குதடி
வடகாத்து வீசுதடி
செந்நெல் மணக்குதடி
சேர்ந்துவந்த கப்பலிலே”

⦁ புகுந்த மண்ணில் ஏற்பட்ட ஏமாற்றம் சுரண்டல் அடக்கு முறைகள் என்பவற்றின் காரணமாக அவர்களின் வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை ஏற்படுத்திய அனுபவம் காரணமாக தமது தாயகம் பற்றிய ஏக்க உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது:

“ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்
போரான கண்டியே
பெத்த தாயே நா மறந்தேன்”
——–
“பாதையில வீடிருக்க
பழனி சம்பா சோறிருக்க
எருமை தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீமை”
———–
“கூனியடிச்சமலை
கோப்பி கண்டு போட்ட மலை
அண்ணனை தோத்த மலை
அந்தா தெரியுதடி”.

என்ற இப் பாடல் வரிகளை விபரிக்கும் போது மலையக பெரும் கவி சி.வி.வேலுப்பிள்ளை காடுகளை அழித்துப் புதிய மலைகளை உருவாக்கும் போது சாவு என்பது சர்வ சகஜமானது. மலையகத்தின் ஒவ்வொரு மலைகளும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தத்தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனைத் தோத்த மலைகளாகதானிருக்கும்.

மலையகத்தின் மலைகளின் மீது உங்களுக்கு ஏறிடச் சந்தர்ப்பம் வாய்த்தால் உங்கள் காலடிகளைக் கவனமாய் எடுத்து வையுங்கள். ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த மலைகள்||. எனக் கூறுவது மலையக மக்களின் வாழ்நிலைகளை சிறப்பாகவே உணர்த்தி நிற்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

தோட்டங்களில் முறையான மயானங்கள் இன்றும் இல்லை.

அதே வேளையில் இன்றும் மலையகத்தில் பெரும்பாலான தோட்டங்களில் நிலையான முறையான மயானங்கள் இல்லை என்ற உண்மை வெளியில் கூறப்படுவதில்லை. இன்று மயானமாக இருப்பவை காலப்போக்கில் தேயிலை மலைகளாக மாற்றப்படுகின்றன.

அதேவேளையில் பல தோட்டங்களில் தேயிலை மலைகளிலேயே இன்றும் தோட்டங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயானங்காளக விரிந்து கிடக்கின்றன.

எனவே “அண்ணனைத் தோத்த” மலையாக மலையக தோட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் இன்றும் உள்ளன.

மலையக மக்களின் வரலாறு 200 வருடத்தை எட்டிய போதும் இன்றும் அந்த மக்கள் கூட்டத்தின் பெரும் பகுதியினர் இறந்தவர்களை மரியாதையாக அடக்கம் செய்ய நிலம் இல்லை. அதாவது அந்த மக்கள் இருக்கும் போதும் சொந்தமாக வாழ சொந்த நிலம் இல்லை. அதே மண்ணில் வீழ்ந்த பின்னும் அதே நிலைதான் உள்ளது.

அந்தவகையில் “மலையகத்தின் ஒவ்வொரு மலைகளும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்தத்தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனை அல்லது தந்தையை அல்லது தாயை அல்லது உறவுகளை “தோத்த” மலைகளாகத்தான் இருக்கும் என்ற சி.வி.வேலுப்பிள்ளையின் வரிகள் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து சி.வி.வேலுப்பிள்ளையின் கவிதைகள் நிறையவே பேசியுள்ளன. அவருடைய இரண்டு கவிதைகளை உங்கள் முன் வைக்கின்றேன். “

(தொடர்ச்சி அடுத்த இதழில்)