தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை
Share
தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிபடுகின்றனர்.
அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேலாக பதிவாகி வருகின்றது. அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாட்டிற்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஏப்ரல் 27, 28 ,29, 30 என 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் அதிக மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பது இதுவே முதல் முறையாகும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.