LOADING

Type to search

இந்திய அரசியல்

நிர்மலா தேவி குற்றவாளி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Share

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர், நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அருப்புக்கோட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி நிர்மலாதேவியை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நிர்மலாதேவி வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த நிர்மலாதேவி உள்பட 3 பேரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகி வந்தனர். சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் ஏப்ரல் 26-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்தார். இந்த வழக்கில் கைதான மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து நீதிபதி பகவதி அம்மாள் கேட்டபோது, நிர்மலாதேவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. நிர்மலாதேவி முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும், நிர்மலா தேவியை குற்றவாளி எனவும் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.