LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மே தினக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்

Share

நடராசா லோகதயாளன்

தமிழரின் தாயகமாகிய வடக்கு, கிழக்கு பூர்வீக மண்ணில் சிங்கள பௌத்த மரபுரிமை தொன்ம ஆக்கிரமிப்புகள் ஊடாக ஒரு பண்பாட்டுப் போரினை தம்மீது சிங்கள தேசம் ஏவிவிட்டிருக்கின்றது என்று தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற மேதினக் கூட்டம் மற்றும் பிரகடணத்தில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்
தமிழ்த் தேசிய மே நாள் புதன்கிழமை (1) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், உட்பட பலர் பங்குபெற்றனர்.

அந்த கட்சியின் மே தின பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”இரத்தம் தோய்ந்த செங்கொடிகளை உயர்த்தியவாறு, உழைத்து உயர்வுபெற்ற உழைப்பாளிகளின் தியாகங்களை நினைவுகூர்ந்து மேன்மை கொள்ளும் நாளே மே நாள். இரத்தத்தினால் தோய்ந்த செங்கொடிகள், அவை வென்றுதந்த போராட்டங்களின் சுதந்திரத்தின் மாண்பையும் அதன் கண்ணியத்தையும் மனிதகுல வரலாற்றில் இடையறாது பதிவுசெய்துள்ளது என்பதை பெருமையோடு நினைவு கொள்ளும் நாளே இந்த மே நாள் ஆகும்.
மானிட சமூகத்திற்கு போராடாமல் வாழ்வில்லை என்பதையும், மாண்பில்லை என்பதையும் மனிதகுலம் நோக்கி அறைகூவல் விடுத்த எழுச்சி நாள் மே நாள்.
அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகி சுதந்திரப்பண் இசைக்க வேண்டுமென்ற மானிட தாகத்தின் மகிமையை ஒடுக்குமுறையாளர்களுக்கு உரத்துச் சொல்லும் உன்னத நாள் இந்நாள்.

பூமிப்பந்தில் வாழுகின்ற உழைப்பாளர்களின் செம்மையும், செழுமையும், சீர்நிறைந்த வாழ்வியலும் வையகத்தில் முந்தியிருக்கச் செய்யும் வகையில் முழுமை தந்த நாளாக, வேதனைகள் மத்தியிலும் மகிழ்ந்து நிறைவுபெறும் நாளாக மே நாள் வரலாற்றில் வடிவமெடுத்து வருகின்றது என்பதை பெருமையுடன் நினைவு கொள்வோம்.

உலகத் தொழிற்சமூகங்களோடு இணைந்து ஈழத்தமிழர்களும் தங்களின் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, எல்லாவகை
அடிமைத்தனங்களிலிருந்தும் விடுபடப் போராடியவாறு உலகத் தொழிலாளர் நாள் நிகழ்வில் பங்குகொள்வது நிறைவைத் தருகிறது.

இலங்கைத்தீவில் வாழுகின்ற தமிழ்த் தேசிய இனம் என்ற
வகையில், ஈழத்தமிழர்களாகிய நாம் எமது இனத் தேசிய விடுதலைக்காகப் போராடிக்கொண்டே சமநேரத்தில் எமது தொழிலாளர்களின் விடுதலைக்காகவும் போராட வேண்டிய சவால்களைச் சந்தித்து நிற்கின்றோம். வடிவங்கள் வேறுபட்ட போதும் வேறுபடாத ஒடுக்குமுறைச் சித்தாந்தம் சிறீலங்கா அரசினால் தமிழர் தேசம் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டே வருகிறது.
ஆயுத வழிமுறைகள் அமைதியடைந்த போதிலும் கட்டமைக்கப்பட்டதும் கட்புலனாகாததுமான இன அழிப்புப் போர் தமிழர் தேசத்தில் ஆழமாக குவியச் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழரின் தாயகமாகிய வடக்கு, கிழக்கு பூர்வீக மண்ணில் சிங்கள பௌத்த மரபுரிமை தொன்ம ஆக்கிரமிப்புகள் ஊடாக ஒரு பண்பாட்டுப் போரினை எம்மீது சிங்கள தேசம் ஏவிவிட்டிருக்கின்றது. இது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசை ஆகிய தமிழ்த்தேசியத்தை அழித்துவிடுவதற்கான கட்டமைக்கப்பட்ட செயல்முறையாக நீட்சி பெற்று வருவது வேதனை தருகிறது.

உழைப்பினால் பெறப்படுகின்ற வெகுமானங்களை மாத்திரமன்றி வாழ்வியலின் அடிப்படை உரிமைகளையே இழந்து நிற்கின்ற துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. தமது வாழ்வுரிமைக்காக, சுதந்திரத்துக்காக போராடுகின்ற எமது மக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் துணைகொண்டு ஆட்சியாளர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றனர். மதச்சார்பற்ற இலங்கை என்ற அரசியல் அமைப்பின் வாசகத்தை மறுத்து பன்மைத்துவத்தைப் புறக்கணித்து, இலங்கைத்தீவை பௌத்த சிங்கள நாடு என நிறுவுவதில் சிங்கள அரசுகள் மிக இறுக்கமாகவே செயற்பட்டு வருகின்றன.

தமிழர் மரபுரிமைகளைச் சிதைத்து, தொன்மங்களைத் தோண்டியெடுத்து ஈழத்தமிழ் வரலாற்றை இல்லாதொழிப்பதில் அரச கட்டமைப்புகள் அதிகாரபூர்வமாக செயற்பட்டு வருகின்றன. மிகப்பெரும் இனப் படுகொலையை சர்வதேசம் பார்த்திருக்க ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்திய பின்பும், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஆழ ஊடுருவி அகற்றிவிடுவதில் பௌத்த சிங்கள பீடம் அதிகூடிய கரிசனை செலுத்தி வருகிறது.

உழைப்பாளிகளாகிய தங்களின் பிள்ளைகளும், கணவன்மாரும், உறவுகளும் ஆயிரக்கணக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் அந்தப் பெற்றோரின் நெடுநாளைய போராட்டங்களுக்கு பெறுபேறுகள் எவையும் கிட்டவில்லை. சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளால் அவர்களது குடும்பங்கள் உழைப்பாளரை இழந்து பல்லாண்டு காலமாக தவித்து வருகின்றன.

நிலங்களைப் பறிப்பதும், நில வளங்களை அள்ளிச் செல்வதும், கடலினைப் பறிப்பதும், கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதும் என சிங்கள அரச காரியங்கள் சட்டத்திற்கு முரணாக நிகழ்ந்தேறி வருகிறது. ஊழலும் மோசடியும் சகல நிர்வாகத் துறைகளிலும் நிறைந்து போயிருக்கிறது. மனிதாபிமானப் பார்வைகள் இன்றி பக்கச்சார்புகளாலும் முதலாளித்துவ மேலாண்மைகளாலும் இலங்கைத்தீவு மலிந்து நிறைந்து போயுள்ளது.

குறிப்பாக, முப்படை பலமும், சர்வதேச நெருக்க நிலை உறவும், அணிசேரா கொள்கையும் கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசு, சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தின் களமாக இலங்கையைத் திறந்து விட்டிருக்கிறது. வன்முறை மேலோங்கி பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து சனத்தொகையில் சரிநிகராய் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பொருளாதாரப் பலம் மிக்கவர்களாலும், அரசியல் வன்பலத்தாலும் சீரழிந்துபோயுள்ளது. அஞ்சுவதும் அடிபணிவதும் அரசியல்; துதி பாடுவதும் ஊடகப் பண்புகளாக புதிய வடிவம் பெற்றிருக்கிறது. மொத்தத்தில் பொருளாதார கட்டமைப்புகள் சீர்குலைந்து, வாழ்வின் வசதிகள் வலுவிழந்து, வருமானம் குறைந்து வறுமை மேலோங்கி முடங்கிய வாழ்வில் எம் தேசம் சிக்கித் தவிக்கிறது. மானியங்களும், நிவாரணங்களும் உழைக்கும் மக்களின் உயர்வைக் கட்டுப்படுத்தும் அன்பளிப்புகளாக அரசால் வழங்கப்படுகிறது.

மொத்தத்தில் பொருளாதார சிறப்புமின்றி, அரசியல் சீர்திருத்தமுமின்றி, தமிழர் வாழ்வில் சுயாட்சியுமின்றி தமிழர்களின் தேசிய வாழ்வு சிங்கள தேசத்தால் காவு கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய நிர்மூலமான சூழ்நிலையில் அயலக இந்தியாவும், அனைத்துலக நாடுகளும் தமது மனச்சாட்சிக் கதவுகளை இறுகமூடி அமைதி கொள்வது ஈழத்தமிழர்களை ஆழமான வேதனைக்கு இட்டுச்சென்றுள்ளது. தமிழ்த் தேசிய இனம் தமது வாழ்வுரிமையை வென்றெடுப்பதற்கு இத்தகைய ஒடுக்குமுறைச் சூழல்களின் மத்தியில் தொடர்ந்து போராடும் சக்தியை புதுப்பித்துக் கொள்வதே இன்று எம்முன் உள்ள ஒரே வழியாகும்.
எமது இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த கல்லறை மேனியர்களை நெஞ்சங்களில் நினைவு கூர்ந்து, அந்த சத்திய இலட்சியத்திற்காக தொடர்ந்து போராடுவதே தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு ஒரே வழியாகும் என்று இன்றைய இந்த மே நாளில் நாம் பிரகடனம் செய்கின்றோம்.

தமிழர் இருப்பை அழித்து, பௌத்த சிங்கள மேலாதிக்கத்தைத் திணித்து பூர்வீக நிலத்தையும், பண்பாட்டு வாழ்வியலையும் அழிக்க நயவஞ்சகத்தோடு ஆட்சி புரியும் சிங்களப் பேரினவாத கருத்தியலுக்கு எதிராக இங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், மக்களும் இணைந்து எமது தேசியத் தந்தை – தந்தை செல்வா அவர்கள் வகுத்த பாதையில் மரபுவழித் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்கின்ற உன்னத இலட்சியங்களுக்காக இல்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் அணிதிரண்டு போராடி, எல்லா ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற்று, எமது இனத்தின் உரிமையை அடைந்தே தீருவோம் என திடசங்கற்பம் பூணுகிறோம்.”

கோடையின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் இந்த மே தின கூட்டத்தில் பங்குபெற்றனர்.