ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!
Share
மக்களவை தேர்தலில் வயநாட்டை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.
இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல், கட்சித் தலைவர்கள் பரப்புரை என தேர்தல் களத்தில் அனல் பறந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளான உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலியில், அக் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது.
கடந்த தேர்தலில், ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டார். இந்த முறையும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே, மன்மோகன் சிங் ஓய்வு பெற்றதையடுத்து அவர் ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். இதனால், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி நீடித்து வந்தது. அதேபோல் அமேதி தொகுதியில் தொழிலதிபரும், பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவை காங்கிரஸ் கட்சி களமிறக்கப்போவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. அத்தொகுதிகளில் இன்றுடன் வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.