துபாயிலிருந்து மதுரைக்கு நூதன முறையில் ரூ.58 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!
Share
துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வரும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படி இருந்த நபரை அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவரின் வயிற்றுக்குள் சிறிய அளவில் ஏதோ இருப்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை செய்ததில், அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரின் மகன் முகமது அபுபக்கர் (வயது 33) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரது வயிற்றில் இருந்த கேப்சூல் உருண்டைகளை அதிகரிகளின் மேற்பார்வையில் இனிமா கொடுத்து வெளியே எடுக்கப்பட்டது. அந்த உருண்டைகளை சோதனை செய்தததில் பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது தெரிய வந்தது. இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 812 கிராம் எனவும், அவற்றின் மதிப்பு 58 லட்சத்து 34 ஆயிரத்து 220 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கத்தை கடத்தி வந்த முகமது அபுபக்கரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.