சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
Share
பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவல்துறை குறித்து அவதூறாக பேசியதாக கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, 5 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி காவல்துறை வழக்கு பதிந்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களை போலியாகத் தயாரித்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கை சென்னை குற்றப் பிரிவு காவல்துறை நேற்று பதிவு செய்த நிலையில், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த ஆவணங்களை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.