LOADING

Type to search

கனடா அரசியல்

மொன்றியல் நகரில் பாவலர் பவானியின் (பவித்திரா) ‘வியன்களம்’ கவிதைநூல் அறிமுக விழா.

Share

கடந்த சனிக்கிழமை 11.05.2024 அன்று மொன்றியல் நகரில் இயங்கும் கல்விச்சாலையான ஆத்மஜோதி வகுப்பரங்கில், நூற்றுக் கணக்கானஇலக்கிய ஆர்வலர்கள் மத்தியில், ‘வியன்களம்’ போர்க்காலக் கவிதைத் தொகுப்பு நூல் மிகவும் சிறப்பாக அறிமுகமாகி, வருகை தந்தவர்கள் கரங்களில் அலங்கரிக்கப்பட்டது.

 

ஆத்மஜோதி ஆன்மீகக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பாளர்களில் ஒருவராகிய . உதயகுமார் அவர்களின் தலைமையில் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

வழமைபோல் சிறப்பு விருந்தினர்கள் சிலர் மங்கல விளக்கேற்றவும், ஆத்மஜோதி பள்ளி மாணவர்கள் இறைவணக்கம், தாய்மொழி வாழ்த்துப் பாடல்கள் ஆகியவற்றை மிகவும் இனிமையாகப் பாடி அறிமுக விழாவைப் பக்திக் சூழலுக்குக் கொண்டு வந்தனர்.

பாடுவதில் பயிற்சி பெற்ற பண்ணிசை மாணவர்களுக்கு எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறினர்.

வரவேற்புரையையும், தலைமையுரையையும் திரு உதயகுமார் தமிழர் பண்பாட்டிற்கமையச் செவ்வனே நிகழ்த்தினார். கவிஞர் பவித்திரா(பவானி) அவர்களின் கவிபுனையும் ஆற்றலையும், தமிழ் மேல் கொண்ட காதலையும் உணர்வு பூர்வமாக இரசித்து, வாழ்த்திச் சபையோரை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து முதலாவதாக, எழுத்துலகில் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான தமிழன்பரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நிறுவனருமான கே.ரி.சண் முகராஜா (வீணைமைந்தன்) அவர்கள் ‘வியன்களம்’ நூல்பற்றி மிகவும் விரிவானதொரு உரையை வழங்கிச் சபையோரை வியப்புக்காளாக்கினார். உணர்ச்சி மயமாக்கினார். ‘போர்க் கால இலக்கியங்கள்’ என்னும் புதிய தமிழ் வரவுக்குக் கவிஞர் – பவித்திராவின் இலக்கியப் பங்களிப்புப் பற்றி வியந்து விபரித்தார். பல ஆதாரங்களைத் தொகுத்தளித்தார்..

அதுபோன்று இரண்டாவது விமர்சன ஆய்வாக முன்னாள் ஆசிரியை உமாதேவி சிவதாசன் அவர்கள், நூலில் பொதிந்துள்ள பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் இலக்கிய, பொருள், சொல் நயங்களை மிகவும் தெளிவாக எடுத்து விளக்கினார். அவரது ஆழமான ஆய்வும், விளக்கமும் ‘வியன்களம்’ நூலை வாங்கி வாசிக்கத் தூண்டும் வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தன.

நிகழ்ச்சியில் கலந்து நூலின் கவிதை பாடிய – வாசித்த ஆத்மஜோதி நிறுவனத் தலைவரான திரு. சசிகுமார் கிருஷ்ணா அவர்கள் தனதுரையில் தன்னைத் தூங்க விடாமல் வாசிக்க வைத்த ‘வியன்களம்’ கவிதைப் பக்கங்களை நயம்பட விளக்கினார்.

இறுதியாக நுலாசிரியை திருமதி பவானி தர்மகுலசிங்கம் (பவித்திரா) அவர்கள் ஏற்புரையை வழங்கியதுடன், நிகழ்ச்சியை நடத்துவதற்கு விழா மண்டபத்தை நல்கியதுடன், தனக்கு உதவியாக முன்னின்று, எல்லாவற்றையும் நடத்திய ஆத்மஜோதி தமிழிணையத்தினருக்குத் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

நிறைவாக, இரவிச்சந்திரா தவராஜா அவர்களது நன்றியுரையுடன் விழாவானது முடிவுக்கு வந்தது. வருகை தந்திருந்த அனைவரும் சிறப்பான விழாவொன்றில் தமது நேரத்தைச் செலவிட்ட திருப்தியுடனும், மகிழ்வுடனும் விடைபெற்றுச் சென்றனர்.