LOADING

Type to search

இந்திய அரசியல்

“தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கப்படலாம்” – அரவிந்த் கெஜ்ரிவால்!

Share

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

     ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதனையடுத்து இதுகுறித்து கெஜ்ரிவால் ஒரு காணொளி வெளியிட்டார். அதில், “நான் உள்பட மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரையும் சிறையில் அடைத்தனர். தற்போது எனது உதவியாளரையும் சிறையில் அடைத்துள்ளனர். இப்போது ராகவ் சதா, அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோரை சிறையில் அடைப்போம் என்று கூறுகிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியினர் அத்தனை பேரையும் சிறையில் தள்ள முயற்சிக்கிறார் மோடி” என தெரிவித்தார். அவருடைய இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டில்லி காவல்துறையினர் கைது செய்தனர். பாஜக தலைமை அலுவலகம் நோக்கி இன்று ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். இதனை கெஜ்ரிவால் அறிவித்தார். ஆனால், முற்றுகை போரட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பாஜக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடையை மீறி ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் இந்நிலையில், டில்லி ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது: “ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை அடுத்தடுத்து கைது செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. எங்களை அலுவலகத்தில் இருந்து விரட்டி தெருவுக்கு கொண்டு வருவதே அவர்களின் நோக்கம்.

சில நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று அமலாக்கத்துறையின் வழக்குரைஞர் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இப்போது எங்கள் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்பதால், தேர்தல் முடிந்தவுடன் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்குவார்கள். இவைதான் பாஜகவின் திட்டங்கள். இவ்வாறு அவர் கூறினார்.