LOADING

Type to search

இலங்கை அரசியல்

இராணுவ மயமாகி வரும் இலங்கையின் எதிர்க்கட்சி

Share

”சஜித் பிரேமதாச தலைமையிலான இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்கனவே போர்க்குற்றவாளியென குற்றம்சாட்டப்படும் முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.யாக உள்ள நிலையில் கடந்த இரு மாதங்களுக்குள் மட்டும் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க , கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் தயா சந்தகிரி,முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தளபதியான ஓய்வு பெற்ற நிமல் லெவ்கே ஆகியோரும் ஓய்வுபெற்ற 11 மேஜர் ஜெனரல்களும் ஒரு பிரிகேடியரும் இணைக்கப்பட்டு உயர்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் தமது ஆட்சியில் இராணுவத்திற்கே முன்னுரிமையெனவும் அறிவிப்பு”

கே.பாலா

மலையக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் பங்காளிகளாகவுள்ள சஜித் பிரேமதாச தலைமையிலான இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் நெருங்க ,நெருங்க இராணுவமயமாகி வருவதுடன் தமது அரசாட்சியில் இராணுவத்திற்கு முன்னுரிமையளிக்கப்படுமென அக்கட்சியின் தலைவர் அறிவித்திருப்பதும் இந்த தேர்தல்களில் இக்கட்சி வெற்றிபெற்று விட்டால் அது இலங்கையில் மீண்டுமொரு இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அப்போது அக்கட்சியின் பிரதித்தலைவராக இருந்த சஜித் பிரேமதசாவுக்கும் இடையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்சியின் பெரும்பாலானவர்கள் சஜித் பிரேமதாசாவின் பக்கம் நின்றதால் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனையடுத்த அந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்த்து சஜித் பிரேமதாச போட்டியிட்ட நிலையில் எதிர்பார்த்தது போலவே தோல்வியடைந்தார்.

இதனையடுத்து ஜனாதிபதி பதவி தான் கிடைக்கவில்லை.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியையாவது கைப்பற்றுவோம் என நினைத்த சஜித் பிரேமதாச அதற்கான பல முயற்சிகளை எடுத்தபோதும் அவை எதுவும் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுபடாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஒன்றை ஆரம்பித்து 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார்

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அக்குறுகிய காலப் பகுதிக்குள் புதிய அரசியல் கட்சியொன்றை பதிவு செய்ய முடியாத நிலையால் சஜித் பிரேமதாச ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்த ”அபே ஜாதிக பெரமுன” வைத் (எமது மக்கள் முன்னணி) தனது புதிய கட்சியாக தெரிவு செய்தார். இந்தக்கட்சியைத்தான் பின்னர் ‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்று பெயர் மாற்றி தன்னை கட்சியின் தலைவராகவும் ரஞ்சித் மத்தும பண்டாரவை பொதுச் செயலாளராகவும் அறிவித்து கட்சியின் சின்னமாக தொலைபேசி சின்னத்தையும் பெற்றுக்கொண்டார்.

2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இந்தக்கட்சியில் சிறுபான்மையினக் கட்சிகளான மனோகணேசன் தலைமையிலான மலையகத் தலைவர்களான இராதாகிருஷ்ணன்,பழனி திகாம்பரம் ஆகியோரைக்கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி,ரவூப் ஹக்கீமை தலைவராகக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீனைத் தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பங்காளிக் கட்சிகளாகவுள்ளன.

இவ்வாறு இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனும் ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பிரதித்தலைவருமான சஜித் பிரேமதாசவை தலைவராகவும் தமிழ், முஸ்லிம் கட்சிகளைப் பங்காளிக் கட்சிகளாகவும் கொண்ட இந்தக்கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை கணிசமானளவில் பெற்று வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்களை கொண்டிருப்பதாக எதிர்வு கூறப்பட்டு வரும் நிலையில் தான் கட்சி திடீரென இராணுவ மயப்படுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை இராணுவத்தின் தளபதியாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இருந்த போது அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவரும் சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகவும் இருந்தவரான இராணுவ மேஜர் சேனக டி சில்வாவை உரிமையாளராகக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்த ”அபே ஜாதிக பெரமுன” (எமது மக்கள் முன்னணி) என்ற கட்சியைத்தான் சஜித் பிரேமதாச தன் வசமாக்கி ”ஐக்கிய மக்கள் சக்தி”யாக பெயர்மாற்றி அதன் வாழ் நாள் உறுப்பினராக ஓய்வு பெற்ற இராணுவ மேஜரான சேனக டி.சில்வாவையும் அவரது மனைவியான டயான கமகேயையும் நியமித்து அதில் டயான கமகேயை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கும் கொண்டு வந்தார்.

அது மட்டுமன்றி இலங்கை இராணுவத்தின் தளபதியாகவிருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவையும் தனது கட்சி வேட்பாளராக்கி அவரையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்ததுடன் தனது அரசு அமைந்தால் அதில் பாதுகாப்பு அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தையும் சஜித் பிரேமதாச பொது மேடைகளில் வழங்கியிருந்தார்.

ஏற்கனவே இராணுவ மேஜரை வாழ் நாள் உறுப்பினராகவும் இராணுவத்தளபதியை பாராளுமன்ற உறுப்பினராகவும் கொண்ட இந்தக் கட்சியில்தான் தற்போது முன்னாள் இராணுவ, கடற்படைத் தளபதிகள் படு தீவிரமாக இணைக்கப்பட்டு அவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகளும் வழங்கப்பட்டு வருவதுடன் நாட்டில் அரசொன்றை அமைக்க இராணுவத்திலுள்ளவர்கள் தமது கட்சியில் இணைய வேண்டும் என்ற அழைப்பையும் எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இதுவரையில் முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க. இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் ஓய்வு பெற்றவர்களான மேஜர் ஜெனரல் சமன் லியனகே ,மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சி, மேஜர் ஜெனரல் ஹேரத் , மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி, மேஜர் ஜெனரல் பிரியந்த நாபானகொட, மேஜர் ஜெனரல் வசந்த ஜயசூரிய , மேஜர் ஜெனரல் எச்.எம்.எம்.பி ஹேரத், மேஜர் ஜெனரல் நிஷங்க ரணவன, மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து மேஜர் ஜெனரல் உபுல் விதானகே, மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, பிரிகேடியர் மஞ்சுள விஜேசிங்க ஆகிய இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் இணைந்துள்ளனர்.

இவர்கள் மட்டுமன்றி இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் தயா சந்தகிரி,முன்னாள் சிறப்பு அதிரடிப்படை தளபதியான ஓய்வு பெற்ற நிமல் லெவ்கே,ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளதுடன் இவர்கள் அனைவருக்கும்கட்சியில் பல்வேறு பதவி நிலைகளும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறான நிலையில் இராணுவத்தில் தனக்கு எதிராக செயற்பட்டவர்களும் கட்சியில் உள்வாங்கப்பட்டு உயர் பதவிகள் வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசாவுடன் முரண்பட்ட தால் சரத் பொன்சேகா கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அது தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சி இராணுவ மயப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அரசின் திருட்டு, ஊழல், மோசடி, கொள்ளை மற்றும் தேசிய சொத்துக்கள் மற்றும் வளங்களை வீணடிப்பதை இல்லாதொழிக்க இராணுவ வீரர்கள் தலையிட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்பும் மனிதாபிமானப் பணியில் பங்காளராகுமாறு இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் .அதேநேரம் 88/89 புலிகளுடனான யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட, ஆதரவற்ற குடும்பங்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்றும் எனது அரசில் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார் .ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ”தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு நன்றி பாராட்டும் மாநாட்டின் ” 6 ஆவது கட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மொனராகலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற போதே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அது மட்டுமன்றி நாட்டிற்காக சிறந்த சேவையாற்றிய இந்த இராணுவ வீரர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களை கவனித்துக் கொள்வோம். நான் பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் இராணுவ வீரர்களது பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றினை தாபிப்பேன். இராணுவ வீரர்கள் தொடர்பான கட்டளைகள் காலத்திற்கு ஏற்றாற் போல் புதுப்பிக்கப்படும். ரணவிரு சேவா அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களும் ஏற்பாடுகளும் போதுமானதாக இல்லை. இராணுவ வீரர்களின் நலன்புரி செயல்பாடுகளுக்காக தனித்த திணைக்களம் உருவாக்கப்பட்டு, இராணுவ வீரர்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்கும் நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்

மலையக தமிழ் ,முஸ்லிம் கட்சிகளை பங்காளிகளாக வைத்துக்கொண்டு ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தலில் தனதும் தனது கட்சியின் வெற்றிக்காகவும் வடக்கு,கிழக்கு மற்றும் மலையக தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் எதிர்பார்த்துக் கொண்டு தென்னிலங்கை வாக்குகளை கவர்வதற்காக கட்சியையும் இராணுவ மயப்படுத்தி தனது ஆட்சியில் இராணுவத்திற்கே முன்னுரிமையென அறிவித்துக்கொண்டு இரட்டை வேடம்போடும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவையும் அவரது கட்சியையும் வெற்றி பெற வைப்பதா அல்லது தோற்கடிப்பதா என்பதனை தமிழ்,முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்.