வங்கதேச எம்பி அன்வருல் அசீம் அனார் கொலை வழக்கு: 3 பேர் கைது!
Share
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்கு சிகிச்சைக்கு வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச எம்பியான அன்வருல் அசீம், கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து இருநாட்டு காவல்துறையும் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு குடியிருப்பில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும்தான் கொல்கத்தாவில் வங்கதேச எம்பி அன்வருல் அசீமை துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த கொலைக்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்க முடியாது என்றும் இதில் ரகசியம் இருக்கிறது எனவும் வங்கதேச உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதும் அவரது உடல் பாகங்கள் மீட்கப்பட்டதா? இல்லையா? என்பதை கொல்கத்தா காவல்துறையும் தெரிவிக்கவில்லை. வங்கதேச காவல்துறையும் தெரிவிக்கவில்லை. ஆனால் கொலை செய்தவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்தியாவுக்கும் அந்நாட்டிற்குமான உறவு பாதிக்கப்படாது எனவும் மேற்கு வங்கம் தெரிவித்துள்ளது.