சேலம் அம்மாப்பேட்டையில் ரவுடி வீட்டில் பழைய செல்லாத ரூ.1 கோடி சிக்கியது
Share
சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் சாபீர் (32), பிரபல ரவுடியான இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் சேலம் வீராணம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டை காவல்துறை நடத்திய சோதனையில் கஞ்சா வைத்திருந்த 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், ரவுடி சாபீரும் கஞ்சா விற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அம்மாப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் காவல்துறை சாபீர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் கட்டுக்கட்டாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. அனைத்தையும் எண்ணிய போது 1000 ரூபாய் நோட்டுகள் 7400-ம், 500 ரூபாய் நோட்டுகள் 5000-ம் என 99 லட்சம் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறை அவரிடம் விசாரித்தனர். அப்போது பிரபல ரவுடியான சாபீர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறினார். மேலும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த தொழில் அதிபர் பணத்தை மாற்றி தருமாறு கூறி தன்னிடம் கொடுத்தார். ஆனால் அதனை மாற்ற முடியாத நிலையில் பணம் கொடுத்தவர் இறந்து விட்டார். இதனால் அந்த பணத்தை தனது வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சாபீரை கைது செய்த காவல்துறை 99 லட்சம் மதிப்பிலான அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.