LOADING

Type to search

கனடா அரசியல்

‘இளையபாரதி’ என்னும் கந்தையா சிவசோதி கண்கலங்கி உரையாற்றிய, இசைச் செல்வி லிலானி தங்கவடிவேலுவின் வாய்ப்பாட்டு அரங்கேற்ற மேடை

Share

கடந்த சனிக்கிழமை. 01-06-2024. இம்மாதத்தின் முதல்நாள் மாலை கனடியத் தமிழர்களின் நுண்கலைகள் மீதான பற்றின் அடையாளமாகத் திகழும் ‘தமிழிசைச் கலாமன்றத்தின்’ அரங்கத்தில் ஒரு இசை அரங்கேற்றம்.

‘இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிதான் அரங்கேற்றச் செல்வி லிலானி தங்கவடிவேலு.

பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தவர் ‘இளையபாரதி’ என்னும் நண்பர், கந்தையா சிவசோதி. நானும் ‘வாணி அக்கா’ என்னும் திருமதி பாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள்.

சிறப்பான நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக, திரு. குணம் செல்லையா மற்றும் செல்வி லிசானி தங்கவடிவேலு ஆகியோர்…

அரங்கேற்றதிற்கு அணிசேர் பக்கவாத்தியக் கலைஞர்களாக வித்தகர்கள் வாசுதேவன் இராஜலிங்கம் மற்றும் தனதேவி மித்ரதேவா மற்றும் இளைய தலைமுறையினர்.

இசைச் செல்வி லிலானி தான் கற்ற வித்தையை இனிதான குரலில் அரங்கேற்றிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு உருப்படியும் ராகமும் தாளமும் தப்பாமல் இசையும் குரலும் இணைந்து சபையோரை மகிழ்வித்த வண்ணம் நகர்ந்து கொண்டிருந்தது.
லிலானியின் குரு இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம். அவரது பாரியார் மற்றும் புதல்வி கானப் பிரியா ஆகிய மூவரும் இசை சார்ந்த கண்காணிப்புடன் மேடையை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

அனைத்து உருப்படிகளும் இனிதே நிறைவேற்றப்பட்டு இறுதியில் தில்லானா. திருப்புகழ் மற்றும் மங்களம் ஆகியன இசைக்கப்பட்டு கரகோசங்கள் சபையிலிருந்து எழுந்து வர. அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் நண்பர் ‘இளையபாரதி’ மேடைக்கு அழைக்கப்பெறுகின்றார்.
அவரும் எழுந்து நடந்து மேடையில் தோன்றுகின்றார்.

ஒரு சிறந்த கலைஞர். ஆழமான வாசகர். ‘மற்றவர்களுக்கு அவர்களுக்கு வாய்களுக்கு முன்னால் தான் ‘மைக்’ வைக்கப்படும். ஆனால், ‘இளையபாரதி’ அவர்களுக்கு இறைவன் தொண்டைக்குள்ளேயே ‘மைக்’கை வைத்துவிட்டான்” என்று அன்றொரு நாள் தமிழகத்தின் நட்சத்திரப் பேச்சாளர் சுகி சிவம் அவர்களால் கனடிய மேடை ஒன்றில் புகழாரம் சூட்டப்பெற்ற ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் பொருளாதாரச் சிக்கல்கள் இன்றி தங்கள் பணிகளை ஆற்ற வேண்டும் என்பதில் அக்கறையோடு அறிவுரைகள் கூறும் ஊடகர்,
இவ்வாறான பல சிறப்பியல்புகளைக் கொண்ட அவர் இன்று என்ன பேசப்போகின்றார் என்பதை செவிமடுப்பதற்காக ஆசனத்தின் முன் நுனிக்கு நகர்ந்து கொண்டு. செவிகளை திறந்து வைத்து தயாராகின்றேன். காரணம் அவரது உரையை நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேட்கும் சந்தர்ப்பம் அது.

அரங்கேற்றச் செல்வி லிலானி பற்றியும் அவர் எவ்வாறு இசைமீதும் எம் மொழி மீதும் சிறுவயதில் ஆர்வம் கொண்டு கற்றார்?. ‘வாணிஅக்கா’ சாந்தா அக்கா’ ஆகிய தமிழாசிரியர்களின் கற்பித்தலை எவ்வாறு ஆர்வத்துடன் பின்பற்றினார்?, தனது வானொலி நிலையத்திற்கு நேரடியாக வந்து சிறுவர் நிகழ்ச்சிகளில் எவ்வாறு தனது மழலைக்குரலால் எம் செம்மொழியை உச்சரித்தார்?. எவ்வாறு தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டார்?, ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையாக அவர் எவ்வாறு உயரத்திற்குச் செல்லத் துடித்தார்? என்பதையெல்லாம் ‘உண்மையின் வடிவங்களாக’ எடுத்துரைத்தார்.

உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த நண்பர் ‘இளைபாரதி’யின் கண்கள் கலங்குகின்றன. இருபக்கமும் வடியும் கண்ணீரை தனது கண்ணாடிக்குள்ளால் கைகளை விட்டு துடைத்துக்கொள்கின்றார். நண்பர் செல்வம் ஒரு ‘ரிசு’ பேப்பரை அவரிடம் சென்று ஒப்படைக்கின்றார், கண்ணீரைத் துடைத்துக்கொள்வதற்காக.

என் கண்களிலிருந்தும் கண்ணீர் வடிகின்றது. காரணம் தெரியவில்லை. ஆனால் நான் துடைத்துக் கொள்ளவில்லை. நன்றாக வடியட்டும் என்று விட்டு விடுகின்றேன். . நண்பர் இளையபாரதிக்காகவும் இசைச் செல்வி லிலானிக்காகவும் என எண்ணிக்கொண்டேன்.
சிறிது நேரத்தின் எனது பத்திரிகைப் பணியையும் உழைப்பையும் சபையோருக்கு எடுத்துரைக்கின்றார்.

பின்னால் திரும்பி எனது துணைவியைப் பார்க்கின்றேன். அவரது கண்களிலும் கண்ணீர்.. என்ன ஆச்சரியம்! இன்று என்ன இசையரங்கேற்றமா? அல்லது கண்ணீர் அரங்கேற்றமா?.
ஏன், இப்பொழுது என் இந்த பதிவை தட்டச்சு செய்யும் போது கூட என் கண்களில் கண்ணீர் தான்..
இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிட்டுவது அரிது.

ஆனால் வாழ்க்கையின் மேன்மையை, கலையின் அற்புதத்தை உணர்ந்து கண்ணீர் வடிக்கும் இவ்வாறான தருணங்கள் அனைவருக்கும் கிட்ட வேண்டும்.

லிலானி அரங்கேற்றம் வெற்றி பெற உழைத்த, வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
இங்ஙனம்- மலையன்பன்- ஆர். என். லோகேந்திரலிங்கம்