LOADING

Type to search

இலங்கை அரசியல்

தெல்லிப்பளையில் பசுமை இயக்கத்தின் உலக சூழல்தின நிகழ்ச்சி

Share

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் புதன் கிழமை (05.06.2024) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டுத் தெல்லிப்பளை மாவை கலட்டி பொது நோக்கு மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

உலகம் பூராவும் பொருத்தமற்ற விவசாய நடவடிக்கைகள், காடழிப்பு, காலநிலை மாற்றம் ,வெள்ளப்பெருக்கு, வறட்சி, மண்ணரிப்பு, மண்சரிவு ,மண்ணில் கலக்கும் கழிவுகள் போன்ற பல்வேறு காரணங்களினால் நிலம் தரம் இழந்துவருகின்றது. இலங்கையிலும் அதன் மொத்த நிலப்பரப்பில் 34 வீதமான அளவு நிலம் தரமிழந்து உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

உலகின் தலையாய சூழற் பிரச்சினையாக உருவெடுத்துவரும் இதனைக் கருத்திற் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளாக ‘நிலம் மீள்சீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியில் இருந்து மீண்டெழுதல்’என்ற கருப்பொருளைத் தேர்வு செய்துள்ளது. இக்கருப்பொருளுக்கு அமைவாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் இந்நிகழ்ச்சியில் உரையாற்றி இருந்தார்.மேலும் , மாவை கலட்டி காந்திஜி சனசமூகநிலையத்தின் தலைவர் பா .நவநேசன் , ஆசிரியர் ப. பிரிந்தன் ஆகியோரும் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றியிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் ‘பிளாஸ்ரிக்கின் பிடியில்’ என்ற கைநூல் வழங்கப்பட்டன . அத்தோடு, ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையோடு சூழல் விழிப்புணர்வு மேற்கோள்கள் அடங்கிய அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.