கவிநாயகர்’ வி. கந்தவனம் அவர்களது நினைவாக குரும்பசிட்டி நலன்புரிச் சபை – கனடா ஏற்பாடு செய்த மனங்களைத் தொட்ட இரு நிகழ்வுகள்..
Share
மறைந்த முன்னாள் அதிபரான கவிநாயகர்’ வி. கந்தவனம் அவர்களது நினைவாக குரும்பசிட்டி நலன்புரிச் சபை – கனடா ஏற்பாடு செய்த மனங்களைத் தொட்ட இரு நிகழ்வுகள் கடந்த 02-06-2024 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று அஜின்கோர்ட் சன சமூக நிலைய மண்டபத்தில் நலன்புரிச் சபையின் செயலாளர் ஐ. ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முதலாவது நிகழ்வாக ‘கவிநாயகர்’ கந்தவனம் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
அதில் வரவேற்புரையை நலன்புரிச் சபையின் செயலாளர் கணேஸ்வரி குகனேசன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து அஞ்சலி உரைகளை திருவாளர்கள் வி. எஸ். துரைராஜா, அகணி சுரேஸ். சி. சண்முகராஜா, இரா சம்பந்தன், மற்றும் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் ஆற்றினர்.
இவர் அனைவரும் கவிநாயகர் கந்தவனம் அவர்களுடன் பயணித்த காலங்களில் அவரிடத்திலிருந்து கற்றுக் கொண்ட விடயங்கள் மற்றும் கவர்ந்த விடயங்கள் ஆகியவற்றை மிகவும் உருக்கத்தோடு பகிர்ந்து கொண்டார்கள்.
அதனைத் தொடர்ந்து ‘தாய்வீடு பத்திரிகை நிறுவனத்தினால் வெளியிடப்பெற்ற ;கவிநாயகர்’ அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பான ‘இலக்கிய உறவுகள்’ என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வு நலன்புரிச் சபையின் செயலாளர் ஐ. ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது.
மேற்படி நூல் தொடர்பான நயவுரையை எழுத்தாளர் குரு அரவிந்தனும். விதந்துரையை வாணி சிவராஜன் அவர்களும். நூல் நோக்கு என்னும் தலைப்பில் பேராசிரியர் அ. சந்திரகாந்தனும், ஆற்ற தொடர்ந்து தாய் வீடு பிரதம ஆசிரியர் திலீப் குமார் அவர்கள் நூலின் வெளியீட்டுரை கச்சிதமாக சபையோருக்கு சமர்ப்பித்தார்.
தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கும் வைபவம் இடம்பெற. அதில் முதலாவது பிரதியை எழுத்தாளர் எஸ். ஜெகதீசன் அவர்களும், தொடர்ந்து பல அழைக்கப்பெற்ற பிரமுகர்களும் பெற்றுக் கொண்டனர்.
கவிநாயகர் அவர்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களுக்கு ஒப்பானதாக அவருக்கான நினைவேந்தல் நிகழ்வும் நூல்வெளியீடும், இலக்கியத் தரமும் கனமும் நிறைந்ததாக இடம்பெற்றது என கலந்து கொண்டவர்களில் பலர் தெரிவித்த வண்ணம் மண்டபத்தை விட்டு நீங்கினர்.
மேற்படி நிகழ்வில் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களது பாரியார் அவர்களும் புதல்வி வாணி மற்றும் புதல்வர் வாரணன் ஆகியோர் தங்கள் குடும்பத்தினர் சகிதம் கலந்து சிறப்பித்தனர்
—-சத்தியன்–