LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் பொது வேட்பாளரும் சுமந்திரனின் கலக்கமும்

Share

”அரசியல் நிகழ்ச்சிக்காக மக்கள் சிவில் சமூகத்தினரைத் தெரிவு செய்து அனுப்பவில்லை. எங்களைத்தான் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று சுமந்திரன் கூறுகின்றார்.ரணிலுக்கு சஜித்துக்கு ,அநுரவுக்கு அவர்களது அழுக்காடைகளை தோய்க்கவோ, சலுகைகளைப் பெறவோ, நீதி அமைச்சு .வெளிநாட்டு அமைச்சுப் பதவிகளுக்கு பேரம் பேசவோ உங்களை தமிழ் மக்கள் தெரிவுசெய்யவில்லை. அதுமட்டுமல்ல இப்போது துரோகிப் பட்டம் கட்டுவது மிக இலகு. அதற்கு இன்றைக்குப் பெறுமதியே இல்லாமல் போய்விட்டது என்றும் சுமந்திரன் கூறுகின்றார். மானம் உள்ளவனுக்குத்தான் தனது கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கோபம் வரும். கற்புள்ளவளுக்குத்தான் தனது கற்பை இழிவு படுத்தினால் கொலைவெறி வரும். நாணயம் உள்ளவனுக்குத்தான் தனது நேர்மையை சந்தேகித்தால் ஆத்திரம் வரும்.தேசப்பற்றுள்ளவனுக்குத்தான் தன்னை துரோகி எனக்கூறினால் சினம் ஏற்படும் அந்த வகையில் இவை எதுவுமே சுமந்திரனுக்கு ஏற்படாது”

கே.பாலா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கம் என்ற கோஷம் தொடர்பில் வடக்கு ,கிழக்கிலுள்ள தமிழ் சிவில் அமைப்புக்கள் ,தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்பார்ப்பும் எதிர்பார்த்ததை விடவும் அதிகரித்து வரும் நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை எதிர்க்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பகிரங்கமாகவே தமிழ் பொதுவேட்பாளர் கோஷத்தை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கம் ஏன் ? அதன் அவசியம், அவசரம்,அரசியல், அனுகூலம் என்ன என்பது தொடர்பில் தெளிவாக விளக்கமளித்து அதற்கு ஆதரவாக தமிழ் கட்சிகள்,தமிழ் மக்களை ஓரணியில் திரட்டும் ”கல்லில் நாருரிக்கும்”முயற்சியில் தமிழ் சிவில் சமூகம் வெற்றியடைந்து வரும் நிலையில் தான் இலங்கை தமிழரசுக்கட்சியின் ”தனி ஒருவன்”ஆன சுமந்திரன் எம்.பி. ”தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லை. இது ஒரு விஷப்பரீட்சை இதற்கெதிராக மக்கள் மத்தியில் இலங்கை தமிழ் அரசு கட்சி பிரசாரம்செய்யும் ” என விஷம் கக்கியுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் கோஷத்துக்கு எதிராக சுமந்திரன் எம்.பி. தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மக்கள் மன்றில் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்’ எனும் தலைப்பிலான அரசியல் கருத்துக் கள நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு விஷம் கக்கியுள்ளதுடன் தமிழ் பொது வேட்பாளர் கோஷத்தை தோற்கடிப்போம் என்றவாறாக சவாலும் விடுத்துள்ளார். இதில் உரையாற்றிய சுமந்திரன் எம்.பி. அரசியல் அனுபவம் உள்ள ஒருவர், ஜனாதிபதி சட்டத்தரணி என்ற தனது ஆளுமைகளை மறந்து சிறுபிள்ளைத்தனமான , கோமாளித் தனமான சில கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

இன்றைய காலகட்டத்திலே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சொல்லுகின்ற ஒரு தரப்பினர் தன்னோடு வந்து உரையாடியதாகவும் இப்படியாக ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கின்றேன் என்று கூறி அவர்களையும் இதில் பங்குகொள்ளுமாறு அழைத்திருந்ததாகவும் தாங்கள் கலந்துகொள்வதாக தனக்கு அவர்கள் வாக்குறுதி அளித்து விட்டு பின்னர் அவர்கள் பின்வாங்கியதாகவும் தங்களின் குழு இந்த நிகழ்வுக்குப்போகக் கூடாது எனத் தீர்மானமொன்றை எடுத்திருப்பதால் தங்களினால் வரமுடியாது என அவர்கள் கூறியதாகவும் .இப்படி இவர்கள் ஒளித்து ஓடுவதற்கு என்ன காரணம் என்று தனக்குத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுருந்தார்.

அவர்கள் ஒரு குழுவாக எடுத்த தீர்மானத்திற்கு கட்டுப்படுகின்றார்கள். இது அவர்கள் தமது குழு மீதி வைத்துள்ள விசுவாசம். தமது முடிவில் உறுதியாக இருக்கும் ஒழுக்கம், ஒற்றுமைக்கு கொடுக்கும் மரியாதை. இது சுமந்திரன் எம்.பி.க்கு தெரியாதது பெரிய விடயம் அல்ல. ஏனெனில் தமிழரசுக்கட்சி மத்திய குழு எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படாதவர் சுமந்திரன். ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழரசுக்கட்சி புறக்கணிக்கின்றது என மத்திய குழு முடிவெடுத்து அறிவித்தால் அதை மீறி தனி ஒருவனாக சென்று அந்த சந்திப்பில் பங்கேற்பவர் சுமந்திரன் .தமிழரசுக்கட்சிக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை மரணத்தருவாயில் வைத்திருப்பதிலும் இவருக்கு பெரும்பங்குண்டு.அவ்வாறானவருக்கு சிவில் சமூகத்தின் இந்த ஒற்றுமை,முடிவுக்கு கட்டுப்படும் ஒழுக்கம் புரியாதது ஒன்றும் புதினம் அல்ல.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் ஒரு தேவையில்லாத விஷப் பரீட்சை என்று நான் கூறுகின்றேன். ஒரு விஷப் பரீட்சையில் நாங்கள் ஈடுபட்டு அசைக்கமுடியாத இந்த மக்கள் ஆணையை இல்லை என்று நிறுவுவதற்கு நாங்கள் முயற்சி செய்கின்றோமா? தமிழ் மக்களின் அரசியல் த தலைவர்களாக அந்த விஷப் பரீட்சைக்கு நாங்கள் செல்லவேகூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. எங்கள் இருப்பையே இல்லாமல் செய்யப்போகின்ற ஒரு நிகழ்வு. இதற்கு நாங்கள் இணங்கினால் இதுவரை காலம் வரைக்கும் எங்கள் உயிர் மூச்சு என்று சொல்கின்ற எங்கள் இறைமை ,எங்களுக்கான சுயநிர்ணய உரிமை அனைத்தையும் இல்லை என்று நாங்கள் சொல்கின்றதான ஒரு செயற்பாடாகத்தான் இது இருக்கும் என்றும் சுமந்திரன் எச்சரிக்கின்றார்.

அப்படியானால் இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து தங்களது இறைமையை, சுயநிர்ணய உரிமையை பாதுகாக்க முடிந்ததா?அல்லது தமிழர்களின் இருப்பையாவது தக்க வைக்க முடிந்ததா? தமிழ் பொது வேட்பாளர் என்பது விஷப்பரீட்சை என்றால் சிங்கள வேட்பாளர் என்பது சுமந்திரனைப் பொறுத்தவரையில் இனிப்பான பரீட்சையா?சிங்கள வேட்பாளர்களுக்கு இதுவரை ஆணை வழங்கிய தமிழ் மக்களுக்கு அவர்கள் கொடுத்ததுதான் என்ன?நீங்கள் கைகாட்டிய சரத் பொன்சேகாவுக்கும் மைத்திரி பால சிறிசேனவுக்கும் தமிழ் மக்கள் வாக்களித்து கண்ட பலன் என்ன? அல்லது நீங்கள் பெற்றுக்கொடுத்த தீர்வுகள்தான் என்ன ? மைத்திரிபாலவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைத்து எதிர்க்கட்சித்தலைவர் பதவியை பெற்றுக்கொண்ட உங்கள் பெரும் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்காக சாதித்த விடயம்தான் என்ன? வேலைவாய்ப்பற்ற தமிழ் பட்டதாரிகள் ”ஜனாதிபதியுடன் பேசி எமக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தாருங்கள்” எனக்கேட்டபோது ”அரசிடம் உங்களுக்கு வேலை வாய்ப்புக் கேட்டால் அது இனப்பிரச்சினைக்கான தீர்வில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறியவரல்லவா உங்கள் பெருந்தலைவர்.

தேர்தல் என்பது அரசியல் செயற்பாடு.அத்தகைய அரசியல் செயற்பாடு அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய விடயம். இதில் சிவில் சமூகத்துக்குப் பொறுப்பு இருக்கின்றது.அவர்கள் ஆலோசனை சொல்லலாம்.அவர்களுடைய ஆலோசனை வரவேற்கத்தக்கது.ஆனால் இது ஒரு அரசியல் நிகழ்ச்சி.அந்த அரசியல் நிகழ்ச்சிக்காக மக்கள் சிவில் சமூகத்தினரைத் தெரிவு செய்து அனுப்பவில்லை. எங்களைத்தான் தெரிவு செய்திருக்கின்றார்கள். மக்கள் ஆணை எங்களுக்குத்தான் இருக்கின்றது. அந்தத் தீர்மானங்கள் எடுக்கின்ற பொறுப்பு எங்களுடைய கைகளில்தான் இருக்கின்றது. அதனை நாங்கள் விட்டுவிட முடியாது.அப்படி விட்டுவிட்டால் எங்களுடையபொறுப்பை நாங்கள் உதாசீனம் செய்தவர்களாவோம் எனவும் சுமந்திரன் வாதிடுகின்றார்.

அரசியல் நிகழ்ச்சிக்காக மக்கள் சிவில் சமூகத்தினரைத் தெரிவு செய்து அனுப்பவில்லை. எங்களைத்தான் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று சுமந்திரன் கூறுவது உண்மைதான் .ஆனால் ரணிலுக்கு சஜித்துக்கு ,அநுரவுக்கு அவர்களது அழுக்காடைகளை தோய்க்கவோ, சாமரம் வீசவோ, சலுகைகளைப் பெறவோ,விசுவாசம் காட்டவோ நீதி அமைச்சு .வெளிநாட்டு அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்படவோ அல்லது பேரம் பேசவோ உங்களை தமிழ் மக்கள் தெரிவுசெய்யவில்லை. அதுமட்டுமல்ல தமிழ் தேசிக்கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டுமென பாராளுமன்றத்தேர்தல் காலங்களில் உங்களுக்காக தமிழ் மக்களிடம் பிரசாரம் செய்தவர்கள் சிவில் சமூகம்தான் .உங்களுக்கு மக்கள் ஆணையை பெற்றுத் தந்ததில் சிவில் சமூகத்திற்கு பெரும் பங்குண்டு அதனை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஆனால் நன்றி மறப்பது உங்களுக்கு கைவந்த கலைதானே ?

தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. நாங்கள் அதில் இருந்து ஒளிந்தோடப் போவதுமில்லை.அதற்காக உடனடியாகத் துரோகிப்பட்டம் கட்டிவிடுவார்கள். இப்போது துரோகிப் பட்டம் கட்டுவது மிக இலகு. அதற்கு இன்றைக்குப் பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. அவ்வாறு கட்டுவதானால் கட்டுங்கள். எதைச் செய்தாலும் பரவாயில்லை என்றும் சுமந்திரன் கூறுகின்றார்.

மானம் உள்ளவனுக்குத்தான் தனது கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கோபம் வரும். கற்புள்ளவளுக்குத்தான் தனது கற்பை இழிவு படுத்தினால் கொலைவெறி வரும். நாணயம் உள்ளவனுக்குத்தான் தனது நேர்மையை சந்தேகித்தால் ஆத்திரம் வரும்.தேசப்பற்றுள்ளவனுக்குத்தான் தன்னை துரோகி எனக்கூறினால் சினம் ஏற்படும். அந்த வகையில் இவை எதுவுமே சுமந்திரனுக்கு ஏற்படாது என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் .

சரி ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினாலும் அதற்கு எதிராக நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டும் . அதுஏன் என்று கேட்டால் அவர் படுதோல்வி அடைகின்றபோது இது எங்களுடைய அரசியல் நிலைப்பாடு அல்ல. அது யாரோ செய்கின்ற கோமாளிக் கூத்து என்று நாங்கள் சொல்லக் கூடியதாகஇருக்க வேண்டும். இது பிரதானமான தமிழ்க் கட்சிஒன்றைச் சார்ந்தவன் என்ற வகையில்நான் சொல்கின்றேன் எங்கள் கட்சியினருக்கும்தான். இதற்கு எதிராக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய வேண்டிய பாரியபொறுப்பு எங்களிடத்தே இருக்கின்றது என்கின்றார் சுமந்திரன்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று சுமந்திரனுக்கு யார் சொன்னது? சில வேளைகளில் தமிழ் பொது வேட்பாளர் வெற்றி பெற்று விடுவார் என சுமந்திரன் அச்சமடைகின்றாரோ தெரியவில்லை. தமிழ் பொது வேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கம் பல தடவைகள் பலராலும் வழங்கப்பட்டு விட்டது. அதனை விளங்கிக்கொள்ளும் அறிவு சுமந்திரனுக்கு இல்லையா அல்லது விளங்கிக்கொள்ள மறுக்கின்றாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற கோஷத்தினால் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களை விடவும் சுமந்திரன் எம்.பி.தான் அதிக கலக்கமடைந்துள்ளார். இதற்கு இரு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும் .ஒன்று சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களில் யாரோ ஒருவரின் தூண்டுதலில் இவ்வாறு செயற்பட வேண்டும். இரண்டாவது தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் வாக்குகள் தான் விரும்பும் சிங்கள வேட்பாளருக்கு செல்லாது விட்டால் அவருடன் தான் செய்து கொண்டுள்ள ”எழுதப்படாத ஒப்பந்தம்” நிறைவேறாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் தமிழ் பொது வேட்பாளரை எதிர்க்க வேண்டும்.