தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை குவைத்திலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது இந்திய அரசு
Share
குவைத் தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
உலகையே உலுக்கியுள்ள இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து இந்தியா கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கோர தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்ததை குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இதில் பெரும்பாலானோர்
இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 195 தொழிலாளர்கள் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய தகவல்படி உயிரிழந்தவர்களில் 40 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து இந்தியா கொண்டு வரவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சையை உறுதி செய்யவும் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதி செய்வதற்காக குவைத்துக்கு சென்றார்
வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங். குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளனர். விபத்தில் தீக்காயமடைந்தவர்கள் அதான், ஜாபர் மற்றும் முபாரக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.