LOADING

Type to search

இந்திய அரசியல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை கைது செய்ய பிடிவாரண்டு அனுப்பியது நீதிமன்றம்

Share

கர்நாடக‌ முன்னாள் முதல்வர் எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் எடியூரப்பாவை, அவரது இல்லத்தில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி 17 வயது சிறுமி தனது தாயுடன் சந்தித்தார். அப்போது சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்ற எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த போலீசார், மார்ச் 14ம் தேதி எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் 354 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த மே 25ம் தேதி புகார்தாரர் திடீரென தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் (சிஐடி) ஜூன் 12ம் தேதி போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு ச‌ம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது தொடர்பாக சிஐடி போலீஸ் தரப்பில் பெங்களூரு மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது போலீஸ் தரப்பில் கூறும் போது, “எடியூரப்பா மீதான வழக்கில் ஜூன் 14ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. இந்த உத்தரவால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.