LOADING

Type to search

இலங்கை அரசியல்

காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு : ஆசியாவில் யாரும் செய்யாததை தான் செய்துள்ளதாகக் கூறுகிறார் ரணில் விக்ரமசிங்க

Share

நடராசா லோகதயாளன்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன. இராணுவம் முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டது என ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் 16-06-2024 ல், அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

மன்னாரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உறுதிகளை வழங்கியபோதே ஜனாதபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளது. கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய” திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும்.

“கடந்த முறை வடக்கிற்கு வந்தபோது மன்னாருக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. மாத இறுத்திக்குள் வருவதாக சொன்னேன். இன்று வந்துவிட்டேன். செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அபிவிருத்தி தொடர்பில் கூறிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வோம்.

இங்கு வவுனியா – மன்னார் மக்கள் வந்துள்ளனர். இங்கிருந்து செல்லும்போது காணி உரிமையுடன் செல்வீர்கள். வரும்போது உரிமை இருக்கவில்லை. செல்லும் போது உரிமை இருக்கும். இந்த காணிகளை இனி உங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம். வடக்கில் 90 ஆயிரம் உறுதிகள் வழங்க வேண்டியுள்ளது. அவற்றில் 40 ஆயிரம் உறுதிகள் எந்த பிரச்சினைகளும் இல்லாதவையாகும்.

கிராமங்களுக்கே சென்று அதற்குரிய பணிகளை செய்யுமாறு ஆளுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். 1935 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திர முனை வரையில் காணி அனுமதி பத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. அவற்றை எந்த நேரத்திலும் இரத்துச் செய்ய முடியும் என்பதால், காணி உறுதி குறித்து மக்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. காணியை சுத்தம் செய்து அதற்குள் விளைச்சல் செய்து அபிவிருத்தி செய்த பின்பும் அதற்கான உரிமை மக்களுக்கு கிடைக்கவில்லை.

85 வருடங்களாக இந்நிலையில் இருந்தனர். 20 இலட்சம் பேர் இப்படியாக உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அதனை மாற்றியமைக்க வேண்டுமென நான் தீர்மானித்தேன். கொவிட் – பொருளாதார நெருக்கடி காலங்களில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக சொத்துக்களையும் இழந்தனர். சொத்துப் பெறுமதி வீழ்ச்சி கண்டது. நாம் இப்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும்போது அதன் நன்மைகளை சாதாரண மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க எம்மால் முடிந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

சாதாரண மக்கள், பொருளாதார நெருக்கடியால், காணிகள், சொத்துகள், செல்வங்களை இழந்தனர். அதனால் காணி அனுமதி பத்திரம் கொண்டவர்களுக்கு காணி உறுதிகளை வழங்க தீர்மானித்தேன். இந்த வேலைத்திட்டத்திற்கு முன்பாக கொவிட் – பொருளாதார நெருக்கடி காரணமாக இழக்கப்பட்டட சொத்துப் பெறுமதி உறுமய திட்டத்தினால் மீண்டும் வலுவடையும்.

ஆசியாவில் எந்தவொரு நாடும் காணி உறுதிகளை மக்களுக்கு வழங்கவில்லை. அதனால் நாம் பெரும் புரட்சி செய்திருக்கிறோம். மேல் மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிக்கும் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வீட்டு உரிமைகளை வழங்கியுள்ளோம். சாதாரண மக்கள் பட்ட கஷ்டங்களுக்கு நியாயம் செய்திருக்கிறோம். காணி உறுதிகளின் பெறுமதிகளை வடக்கு மக்களே அதிகமாக அறிவர். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன. இராணுவம் முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டன.

தற்போது மக்களுக்கு காணிகளுக்கான நிரந்த உரிமை கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ கூடிய சூழல் உருவாகும். உங்களுக்கு கிடைத்த காணிகளை விற்றுவிடாமல். அபிவிருத்தி செய்து இதிலிருந்து நல்ல பயன்களைப் பெறுமாறு கூறி வாழ்த்துகிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.