புதிய வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராட்டம்: கென்யாவில் 39 பேர் பலி
Share
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த போராட்டத்தில் 39 பேர் இதுவரை உயிரிழந்தனர். மேலும், 360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனைகென்யா மனித உரிமை ஆணையம் உறுதி செய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மக்கள் போராட்டம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்ட எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த மாதம் 18ம் தேதி முதல் நேற்று வரையிலான நிலவரம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 32 பேர் மாயமாகி உள்ளதாகவும், 620-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. மக்கள் மீது வெளிக்காட்டப்பட்ட அடக்குமுறையை ஒருபோதும் மறக்க முடியாது. பாதுகாப்புப்படைகளை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது என கென்யா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.