கேரளத்தில் மழை நீரைத் தேக்கி வைக்க குழி தோண்டிய போது தங்கப்புதையல் கிடைத்தது
Share
கேரளத்தில் மழை நீரைத் தேக்கி வைக்க குழி தோண்டிய போது தங்கப்புதையல் கிடைத்தது
‘வெடிகுண்டு பூமி’
கேரள மாநிலம் கண்ணூர் பகுதி அரசியல் கலவரங்களுக்கு பெயர் பெற்ற பகுதியாகும். சி.பி.எம், பாஜக, காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சி தொண்டர்கள் சில நேரங்களில் வெடிகுண்டு வீசியும், ஆட்களை வெட்டியும் அடிக்கடி பயங்கர மோதலில் ஈடுபடுவது வழக்கம்.
கண்ணூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் வெடிகுண்டு சர்வ சாதாரணமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. வெடிகுண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்து பலியானவர்களும் உண்டு.
சமீபத்தில் கண்ணூர் அருகே உள்ள பானூரில் குண்டு தயாரிக்கும் போது சி.பி.எம் தொண்டர் ஒருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுகளை தயாரிக்கும் அரசியல் கட்சியினர், அதை ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பதுக்கி வைக்கின்றனர்.
இந்தப் பகுதிகளுக்கு தவறுதலாக செல்பவர்கள் அது வெடிகுண்டு என தெரியாமல் எடுத்து பார்க்கும்போது வெடித்து சிதறி பலியான சம்பவமும் நடக்கிறது. கடந்து சில நாட்களுக்கு முன்பு பானூர் பகுதியில் கீழே விழுந்து கிடந்த தேங்காய்களை எடுக்கச் சென்ற ஒரு முதியவர் தேங்காய் என நினைத்து எடுத்த போது குண்டு வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
குடத்திற்குள் தங்கம்
இதனால் சமீபகாலமாக கண்ணூரில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஏதாவது ஒரு பொருள் கிடந்தால் யாரும் அதன் அருகே கூட செல்வது கிடையாது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணூர் அருகே செங்களாயி பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தொழில் உறுதித் திட்ட பெண்கள் மழை நீரை தேக்குவதற்காக குழிகளை வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது பூமிக்கு அடியில் இருந்து ஒரு பழங்கால குடம் கிடைத்தது.
அதைப் பார்த்த அனைவருக்கும் அது வெடிகுண்டாக இருக்குமோ என்று பயம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால், தைரியமாக ஒருவர் அதை எடுத்து தூக்கி வீசினார்.
இருப்பினும் வெடிப்பதற்கு பதிலாக அந்த குடம் இரண்டாக உடைந்தது. அதற்குள் வெடிகுண்டுகளுக்கு பதிலாக ஏராளமான தங்கப்பதக்கங்கள், முத்துமணி, கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன. அப்போதுதான் அது ஒரு புதையல் என்று அவர்களுக்கு தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் உடனடியாக செங்களாயி பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவித்தனர். பஞ்சாயத்து அதிகாரிகள் தளிப்பரம்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் விரைந்து வந்து பொருட்களை கைப்பற்றி
தளிப்பரம்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அது புதையல் தானா என்பது குறித்து ஆய்வு நடத்த தொல்பொருள் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.