அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
Share
நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து சிபிசிஐடி தனிப்படை காவல்துறை கைது செய்துள்ளனர்.
கரூரை அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், கடந்த மாதம் 25 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட 3 பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கானது சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். கரூர் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இதற்காக கடந்த வாரம் அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். இந்நிலையில், நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கேரளாவில் வைத்து சிபிசிஐடி தனிப்படை காவல்துறை கைது செய்துள்ளனர்.