யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு!
Share
பு.கஜிந்தன்
சுகாதார அமைச்சின் எற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வும் (Bone Marrow Transplant Unit) மற்றும் இயந்திரக்கருவிகள் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு 16-07-2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரன கலந்து கொண்டு குறித்த நிலையத்தினையும், இயந்திர உபகரணங்களையும் வைத்தியசாலை நிபுணர்கள் குழுவினர்களிடம் கையளித்தார்.
இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையமாக குறித்த நிலையம் காணப்படுகின்றது. இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்திய சாலை ஆகிய இரண்டில் மாத்திரம் காணப்படுகின்றது.
அந்தவகையில் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது இலங்கையில் உள்ள மூன்றாவது சிகிச்சை நிலையமாகும். இது இரண்டு விஷேட படுக்கை அறைகளை கொண்டதாக காணப்படுவதுடன் மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும் என வைத்தியர்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பின்னர் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரன தலைமையிலான குழுவினர்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிலையம், சத்திரசிகிச்சை நிலையத்தை பார்வையுற்றதுடன் நோயாளர்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தினார்.
மற்றும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, புற்றுநோய், அதனோடு இணைந்த நோய் பிரிவு,மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடப் பிரிவு,ஆவணகாப்பக பகுதிகளை பார்வையுற்றதுடன் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இவ் நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பி.ஜி.மகிபால ஹேரத், விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசலே குணவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வைத்திய நிபுணர்கள், செயலாளர்கள், தாதிமார்கள், பலரும் கலந்துகொண்டனர்.