குற்றங்களை தடுக்க சிறப்பு கவனம் – ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா
Share
தென் மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும், என தென் மண்டல ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தார். இங்கிருந்த ஐ.ஜி. கண்ணன் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் மதுரையில் பொறுப்பேற்ற பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியதாவது: தென் மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு, குற்றத் தடுப்பு, ஜாதி ரீதியிலான பிரச்னை வராமல் தடுக்கப்படும். முன்விரோத கொலைகள் நடக்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க ஏற்கனவே உள்ள நடவடிக்கை தொடரும். இதுதொடர்பான நிலுவை வழக்குகளை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்டோருக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும். நகர்ப்புறம், கிராமங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும். நகர் பகுதி, நான்கு வழிச்சாலைகளில் விபத்துக்களை குறைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். நான்கு வழிச்சாலைகளில் 4 முனை சந்திப்பு பகுதியில் விபத்து தடுப்பதற்காக வைக்கப்படும் இருப்புத் தடுப்புகள் (பேரிகார்டு) முறைப்படுத்தப்படும்.
குறிப்பாக காவல்நிலையங்களுக்கு புகார் அளிக்க வருவோரை இன்முகத்துடன் வரவேற்று உரிய உதவி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு வரவேற்பாளர்கள் அதிக கவனம் செலுத்த அறிவுறுத் தப்படும். தென்மாவட்டத்திலுள்ள ரவுடிகள் குறித்த தகவல்கள் உள்ளன. இதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.