LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும் – திருநாவுக்கரசர்

Share

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 23-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றம் அருகே அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன்பின், பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல்வேறு பாத்திரங்களை ஏற்றி நடித்தவர். அந்த பாத்திரமாகவே மாறி மக்களுக்கு பல நல்ல கருத்துகளை கூறி உள்ளார். தற்போது சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க.வில் சும்மாவே பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் நான் வாய் திறந்து கூறி மேலும் பல புதிய பிரச்சனைகளை உருவாக்க விரும்பவில்லை.

நான் ஒரு கட்சியில் இருக்கும்போது மற்றொரு கட்சி குறித்து அதன் நிலைபாடுகளில் தலையிட விரும்பவில்லை. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 2026 தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இதற்கு முன்பு தி.மு.க. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்தபோது கூட காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்காமல் வெளியில் இருந்தே ஆதரவளித்தது. கட்சியை வளர்ப்பதற்கு இளைஞர்களை கவரும் வகையில் இவ்வாறு பேசுவது நான் தலைவராக இருந்த கால கட்டத்தில் இருந்தே மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகும். தங்கபாலு உள்ளிட்ட பலர் தலைவராக இருந்தபோது காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது வழக்கம் தான். தேசிய அளவில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.