மன்னார் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்க பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு
Share
– திரும்பிச் சென்ற அதிகாரிகள்.
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(25-07-2024)
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக ஆலயம் மற்றும் பொதுமக்களின் காணிகளை நில அளவீடு செய்வதற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை 25-07-2024 காலை உரிய திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு நில அளவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அளவீட்டை இடை நிறுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் தீவில் காற்றாலை அமைப்பதற்கும் கனியவள மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னார் தீவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில் தற்போது பேசாலை பகுதியில் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பேசாலை பகுதியில் அமைந்துள்ள புனித வெற்றி நாயகி ஆலயத்துக்கும் பொது மக்களுக்கும் சொந்தமான காணிகளை மின் காற்றாலை அமைக்கும் நோக்குடன் நில அளவீடு செய்வதற்கு பொலிஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் வர உள்ளதாக தகவல் கிடைத்த நிலையில் பேசாலையில் இன்றைய தினம் (25) அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு பேசாலை பிரதேசத்தில் உள்ள பொது மக்கள் நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த இடத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
எனினும் நில அளவை செய்ய வந்தவர்கள் முதலில் அங்கு செல்லாது பேசாலை வடக்கு பக்கமாக சென்று பொலிஸாரின் உதவியுடன் நில அளவை செய்ய வந்ததும் தென் பகுதியில் காத்திருந்த மக்கள் உடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அமைதியான முறையில் கோயில் காணியையும் பொது மக்களின் காணியையும் நில அளவீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தினர்.
இதனால் இரு பக்கங்களிலும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக நில அளவை செய்ய வந்தவர்கள் மக்கள் எதிர்ப்பு காணப்பட்டமையால் குறிப்பிட்ட இடங்களை நில அளவை செய்து திரும்பி சென்றனர்.
தொடர்ச்சியாக குறித்த பிரதேசத்தில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி நில அளவீடு செய்யும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.