முன்னாள் முதல்வர் ஜெகனுக்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்? – ஷர்மிளா கேள்வி
Share
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து விட்டது என்பதை நாடு முழுவதும் அறிய செய்ய வேண்டும் எனும் நோக்கில், 2 நாட்களுக்கு முன்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி டில்லியில் ஜந்தர்-மந்தர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இந்தியா கூட்டணியில் ஜெகன் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே, ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்று ஒரு சிலரும், கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்து விடுவார் என்று ஒரு சிலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெகனுக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், அவரது தங்கையுமான ஷர்மிளா ஆதரவு தெரிவிக்க வேண்டுமென ஆந்திராவிலும், சமூக வலைதளங்கிலும் ஒரு சிலர் கோரிக்கை எழுப்பினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒய்எஸ் ஷர்மிளா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
நான் எதற்காக உங்கள் (ஜெகன்) போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்? காழ்ப்புணர்வு காரணமாக நடந்த சித்தப்பா கொலைக்கு அரசியல் சாயம் பூசியதற்காகவா? கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு உறவாடிய நீங்கள், ஆந்திர மாநில பிரிவினை சட்டம் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து போன்ற கோரிக்கைகளை மத்திய அரசிடம் எழுப்பாமல் இருந்ததற்காகவா? மணிப்பூர் கலவரங்கள் குறித்து இத்தனை நாட்கள் எதுவுமே தெரியாமல் போல் நடித்ததற்காகவா? மதவாத கட்சியான பாஜகவுடன் இத்தனை நாட்கள் உறுதுணையுடன் நடந்து கொண்டதற்காகவா? உங்கள் டில்லி போராட்டத்தில் உண்மை இல்லை. அதனால்தான் நானும், காங்கிரஸ் கட்சியும் உங்கள் போராட்டத்திலிருந்து விலகி தூரமாக உள்ளோம். உங்கள் போராட்டம் உங்களின் தனிப்பட்ட பிரச்சினை. இதில் மக்களுக்கான பயன் இல்லை” என்று கூறியுள்ளார்.