அதிபர் தேர்தல்; டிரம்ப்பை முந்தும் கமலா ஹாரிஸ்
Share
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தார். வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம், மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டுமென அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தினர். நெருக்கடி அதிகமானதால் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக கடந்த 21-ந் தேதி ஜோ பைடன் அறிவித்தார். மேலும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் முன்மொழிந்தார். அப்போது முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் கமலா ஹாரிசின் கை ஓங்கியது. இருப்பினும் 2 முறை அதிபராக இருந்த ஒபாமா, கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” எனக் கூறி ஒபாமாவும் தனது ஆதரவை தெரிவித்துவிட்டார். இதனிடையே அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் டிரம்பை விட கமலா ஹாரிசுக்கு ஆதரவு சற்று அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிசுக்கு 44 சதவீதம் பேரும் டிரம்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா். அதாவது, டிரம்பை விட கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.