LOADING

Type to search

இந்திய அரசியல்

புதிய அரசியல் கட்சி தேதி குறித்து பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

Share

பீகாரில் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதிய அரசியல் கட்சி பற்றிய முடிவை தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் வெளியிட்டு உள்ளார். பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதிய கட்சியை தொடங்குவது என்பதே அவருடைய இந்த அறிவிப்புக்கான முக்கிய நோக்கம் ஆகும். பீகாரின் பாட்னா நகரில் பாபு சபாகார் பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கிஷோர் பேசினார். அப்போது அவர், அக்டோபர் 2-ந்தேதி ஜன் சுராஜ் கட்சிக்கான அடிக்கல் நாட்டப்படும். ஒரு லட்சம் பேர் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் பணியாளர்களாக இருப்பார்கள் என்றார். எனினும், கட்சிக்கு தலைமையேற்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

கட்சியின் தலைவர்கள் எல்லோரும், அவர்களுடைய சொந்த சட்டசபை தொகுதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அவர் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளார். பீகாரில் வளர்ச்சியை கொண்டு வரும் நோக்கோடு செயல்படும் கிஷோரின் செயலால் ஈர்க்கப்பட்டு 3 முக்கிய பிரமுகர்கள் இந்த கூட்டத்தின்போது, அவருக்கு ஆதரவை தெரிவித்து இணைந்துள்ளனர். இவர்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கற்பூரி தாகுரின் பேத்தியான டாக்டர் ஜாக்ரிதி, சமீபத்திய மக்களவை தேர்தலில் பக்சார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஆனந்த் மிஸ்ரா மற்றும் பேராசிரியர் ராம்பாலி சிங் சந்திரவன்ஷி ஆகியோர் கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டனர். அடுத்த கூட்டம் ஆகஸ்டு 4-ந்தேதி நடைபெறும். இதில், கட்சியின் இளம் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்பார்கள்.