இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் – ஈரான் தலைவர் அதிரடி
Share
ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சிக்கு பின், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினியை சந்தித்து பேசினார். அதன்பின்னர், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது ஈரானை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில், ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும்படி தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதற்கு முன் நேற்று காலை தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் ஒன்றை காமினி நடத்தினார். இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. ஹனியே படுகொலையை தொடர்ந்து அவர் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். இந்த படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என ஈரான் மற்றும் ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எனினும், ஹனியேவை படுகொலை செய்த விசயங்களை இஸ்ரேல் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. கடந்த காலங்களில் எதிரிகளை வெளிநாடுகளில் கொன்ற வரலாற்றை இஸ்ரேல் கொண்டுள்ளது. ஈரான் அணு விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தளபதிகளும் இந்த வரிசையில் அடங்குவார்கள். இதுபற்றி ஈரான் அதிகாரிகள் கூறும்போது, ஈரான் அரசு எந்தளவுக்கு வலிமையுடன் பதிலடி கொடுக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்கள் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளை கொண்டு ஈரான் ராணுவ தளபதிகள் கூட்டான தாக்குதலை நடத்த கூடும் என பார்க்கப்படுகிறது. ஆனால், குடிமக்கள் மீது தாக்குதல் நடக்காமல் தவிர்க்கும் வகையில் கவனம் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். ஈரான் அரசு தன்னுடைய கூட்டு படைகள் அமைந்த ஏமன், சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.