யாழ்ப்பாணம் – வடமராட்சியில் தனிமையில் இருந்த பெண் மீது சரமாரியான தாக்குதல் நடத்தி பணம் நகை கொள்ளை!
Share
வடக்கில் தொடரும் மனித நேயத்திற்கு விரோதமான அநியாயச் செயல்கள் . கிராமத்திற்கு கிராமம் பொலிஸ் நிலையங்களும் இராணுவ முகாம்களும் அமைந்திருக்க எவ்வாறு இவை நடைபெற முடியும் என்று வினாவும் பொதுமக்கள்.
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று 01/08/2024 வியாழக்கிழமை அதிகாலையில் சரமாரியான தாக்குதல் நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின் உறுதிப் பத்திரங்களையும் தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
நேற்று அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவேளை கதவை உடைத்து முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கு குடத்தனை மேற்கில் தனிமையில் தூக்கிக்கொண்டிருந்த 68 வயதுடைய வயோதிப் பெண்மீது தாக்குதல் நடத்தி தங்க தோடு, தாலி ஆகியவற்றை கொள்ளையிட்டதுடன் அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபா பணத்தையும் பறித்தெடுத்தது விட்டு, அவர்களது காணிகளின் உறுதி பத்திரங்களையும் கோரியுள்ளனர்.
குறிப்பாக அண்மையில் கொள்வனவு செய்த காணியின் உறுதிப் பத்திரத்தையும் கோரியுள்ளனர். அப்போது அச்சத்தில் அம் முதியவ பெண்மணி உறுதிப் பத்திரத்தை காண்பிக்க அதனை தீயிட்டு கொழுத்தியதுடன் அவரது பாவனை உடுபுடவைகளையும் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த முதிய பெண்மணி அண்மையில் கொள்வனவு செய்த காணியில் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும், அதற்கான பணம் எங்கே இருக்கிறது என்றும் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு அவர், இருந்த காசில்தான் கற்களை பறித்து வேலை செய்யத்தொடங்கியுள்ளோம் என்றும் கூற பொய் சொல்வதாக கூறியும் அவரைத் தாக்கியுள்ளனர்.
இதனால் குறித்த முதிய பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். புதிதாக கொள்வனவு செய்த காணியில் இரவுக் காவலிற்காக தங்கியிருந்த கணவர் அதிகாலை 5 மணிபோல் தனது வீட்டிற்க்கு வந்தபோது தனது மனைவி இரத்த காயங்களுடன் கிடந்ததை கண்டு உடனடியாக அயலவர் உதவியுடன் தனது மனைவியை மீட்டு பருத்தித்துறை அதார வைத்தியசாலையில் அனுமதுத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.