LOADING

Type to search

இந்திய அரசியல்

“மதுரை எய்ம்ஸ் – மத்திய அரசு ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்கவில்லை” – ஆ.ராசா குற்றச்சாட்டு!

Share

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கலை கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டினார். 

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் 5 ஆண்டுகள் ஆகியும் மருத்துவமனையின் சுற்றுச்சுவர்கள் மட்டுமே கட்டி முடித்ததுடன் எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2023 ஆகஸ்ட் 17-ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான விடப்பட்ட டெண்டரை எல்&டி நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகளை எல்&டி நிறுவனம் தொடங்கியது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக எய்ம்ஸ் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

எனவே, மே 2-ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இந்த சூழலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை அதிகாரப்பூர்வமாக துவக்கியதாக கடந்த மே மாதம் எய்ம்ஸ் நிறுவனம்  அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா, எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார். அவர் பேசும்போது, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கலை கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை. எய்ம்ஸ் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை, இதுதான் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்யபடும் நலனா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும்” என தெரிவித்தார்.