தேர்தல் முடிவுக்கு பிறகு ஷேக் ஹசீனா வங்காளதேசம் திரும்புவார் – மகன் தகவல்
Share
வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. இதனால் எழுந்த நெருக்கடியால் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறினார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள அவர், வேறுநாட்டுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் ராஜினாமாவை தொடர்ந்து, வங்காளதேசத்தின் ஆட்சி அதிகாரத்தை அந்த நாட்டு ராணுவம் கையில் எடுத்தது. தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஆட்சி அமையும் வரை, நாட்டில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் அறிவித்தார்.
தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். அந்த நாட்டு சட்டப்படி, வங்காளதேசத்தில் அடுத்த 3 மாதங்களுக்குள் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாட்டை இடைக்கால அரசு வழிநடத்தும். இந்தநிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார். வங்காளதேசத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசத் ஜோய் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: புதிய அரசு தேர்தலை நடத்த முடிவு செய்ததும், அம்மா (ஷேக் ஹசீனா) நாடு திரும்புவார். அவர் போட்டியிடுவாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தற்போதைக்கு அம்மா இந்தியாவில் உள்ளார். எனக்கு அரசியல் ஆசை இல்லை. கட்சிக்காக சுறுசுறுப்பாக செயல்பட்டு நான் இப்போது முன்னணியில் இருக்கிறேன். பாகிஸ்தான் உளவுத்துறை வங்காள தேசத்தில் அமைதியின்மையை தூண்டுகிறது. கடந்த இரண்டு நாட்களில் எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நாங்கள் அவர்களை விடமாட்டோம். நிச்சயம் பதிலடி கொடுப்போம்” என்றார்.