திருச்செந்தூர் கோயில் ஆகஸ்ட் மாதம் வருவாய் ரூ.5.82 கோடி
Share
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கையாக ரூ.5.82 கோடி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மாதந்தோறும் இரண்டுமுறை எண்ணப்படுகிறது. இதன்படி ஆகஸ்ட் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கோயில் வசந்த மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில், உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம், குருகுல வேத பாடசாலை உழவார பணி குழுவினர், ஶ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவார பணிக்குழு மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுப்பட்டனர். இதில் கோயில் உண்டியலில் ரூ. 5 கோடியே 82 லட்சத்து 68 ஆயிரத்து 146 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. 3 கிலோ 787 கிராம் தங்கமும், 49 கிலோ 288 கிராம் வெள்ளியும், காணிக்கையாக கிடைத்தது. மேலும் 1535 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.