தோல்வியடைந்த நாடு அமெரிக்கா என கூறிய டிரம்ப் – பைடன் பேச்சு
Share
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்படுகிறார். இதேபோன்று, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மின்னசோட்டா கவர்னர் டிம் வால்சும் முறைப்படி வேட்பாளராக இந்த மாநாட்டில் அறிவிக்கப்படுவார். அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து கடந்த மாதம் விலகிய அதிபர் ஜோ பைடன் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி அவர் இந்த மாநாட்டில் பேச வந்ததும், கூட்டத்தினர் அவரை வரவேற்கும் வகையில் உங்களை நேசிக்கிறோம் என கோஷம் எழுப்பினர். அப்போது பைடன், அமெரிக்காவை நான் நேசிக்கிறேன் என்று அழுதபடி கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, அமெரிக்க அதிபராக அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக, உங்களிடமும், கடவுளிடமும் நான் உறுதிமொழி ஒன்றை எடுத்து கொண்டேன் என்றார். 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தபோது, அவருடைய ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டிடம் மீது கும்பலாக சென்று தாக்குதல் நடத்தினர். இதனை சுட்டி காட்டிய பைடன், அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை. வெற்றி பெற்றால் மட்டுமே நீங்கள், நாட்டை நேசிக்கிறேன் என கூற முடியாது என்றார். வளர்ச்சியானது அடைய கூடிய ஒன்று என நான் நம்புகிறேன். நம்முடைய நல்ல நாட்கள் நமக்கு பின்னால் இல்லை. நம் முன்னேயே உள்ளன. ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த ஜனநாயகம் இனி பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். தோல்வியடைந்த நாடு என அமெரிக்காவை டிரம்ப் கூறினார். பொதுவெளியில் அவர் கூறியிருக்கிறார். உலகத்திற்கு அவர் அனுப்பிய செய்தியை நினைத்து பாருங்கள். அவர் தோல்வி அடைந்தவர் என்றார். அமெரிக்காவில் விபத்து, வியாதிகளை விட துப்பாக்கி சூட்டால் உயிரிழப்பவர்கள் அதிகரித்தனர். 30 ஆண்டுகளில் முதன்முறையாக இரு அரசியல் கட்சிகள் ஏற்று கொண்ட துப்பாக்கி பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்ததில் நானும், கமலாவும் பெருமை கொள்கிறோம் என்றார்.