சென்னை விமான நிலையத்தில் குரங்கம்மை பரிசோதனை – மா.சுப்பிரமணியன்
Share
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் குரங்கம்மை தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் குரங்கம்மை தொற்று நோய் பாதிப்பு இதுவரையில் இல்லை. ஆனாலும் பொது சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம், துறைமுகங்களில் குரங்கம்மை நோய் குறித்த தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. குரங்கம்மை குறித்த காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என பரிசோதனை செய்யப்படுகிறது.
விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் தடுப்பு ஏற்பாட்டை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் இன்று ஆய்வு செய்தார். டாக்டர் குழு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து அறிகுறி இருந்தால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் குரங்கம்மை நோய் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் 108 அவசர ஊர்தி தற்காப்பு கவச உடை அணிந்து ஊழியர்களுடன் தேவை ஏற்படின் பயணித் திட ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி, மதுரை, திருச்சி, கோவையில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டு அைமக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு பரிசோதனை நிலையத்தில் குரங்கம்மை கண்டறியும் வசதி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பரிசோதனைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். யாருக்காவது அறிகுறி இருப்பது தெரிய வந்தால் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.