நடிகர் நடிகைகளில் எல்லோரும் உத்தமர்கள் இல்லை என்று மன்சூர் அலிகான் காட்டமாக செய்தியாளர்களிடம் கூறினார்
Share
68வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உட்பட பொதுகுழு உறுப்பினர்கள் சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.
திரைத்துறையில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. அதனை மேலும் விரிவு படுத்துவதற்கான ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், கோலிவுட்டிலும் அதுகுறித்து பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மன்சூர் அலிகானும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் திரைத்துறையில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெறுவது குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு காட்டமாக பதிலளித்த மன்சூர் அலிகான், சில சர்ச்சையான கருத்துகளையும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு நடக்கவில்லையா… உண்ணாவில் கற்பழிப்பு நடக்கவில்லையா..? அங்கெல்லாம் கமிட்டி அமைத்துவிட்டார்களா என வாக்குவாதம் செய்தார். மேலும், கமிட்டி அமைத்தால் மட்டும், அதில் 100% உத்தமர்களும் உத்தமிகளும் இடம்பெறுவார்களா எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அதேபோல், நான் ஒன்றும் சீமான் இல்லை என, அவரையும் வம்புக்கு இழுத்த மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மோகன்லாலையும் பங்கம் செய்தார். அதாவது, மோகன்லால் நடிகர் சங்க அலுவலகத்தில் ஜாலி மூடில் செய்வதெல்லாம் சாதாரண விஷயம். இதையெல்லாம் பெரிதுப்படுத்தக் கூடாது என்பதாக பேசினார். மேலும், பாலியல் வன்கொடுமை உலகம் முழுவதும் நடைபெறுகிறது எனவும், திரைத்துறையை அழிப்பதற்காக தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கிளப்பி விடுகின்றனர் என்றும் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது வந்து சொல்வதில் நியாயம் இல்லை. படுக்கைக்கு அழைக்கின்றவர்களை அந்த சம்பவம் நடைபெறும் போதே அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் உத்தமர்கள் இல்லை, நடிகர் சங்கங்களை வலுப்படுத்த வேண்டும் என காட்டமாக பேசினார். அதேபோல் தன்மீது ஒரு பாலியல் தொல்லை வழக்கு தொடர்ந்தார். அதில் நான் எந்த தவறும் செய்யவில்லை என தீர்ப்பு வந்தது. அப்போது அந்த செய்தியை எந்த ஊடகமும் போடவில்லை, நடிகர் சங்கம் கூட என் பக்கம் நிற்கவில்லை என்றார். இன்னொரு முறை நில மோசடி செய்ததாக புகார் வந்தது. அப்போதும் சர்வே எண் படி அது எனக்கு சொந்தமான நிலம் தான் என தீர்ப்பு வந்தது.
இது நடந்தபோதும் தனக்கு யாரும் துணையாக இல்லை என மன்சூர் அலிகான் வேதனை தெரிவித்தார்.