ஊடகங்களில் நடிகைகளின் பாலியல் தொல்லை குறித்து பேசக்கூடாதென நடிகை ரோஹிணி அறிவுறுத்தியுள்ளார்
Share
பாலியல் தொல்லைகள் குறித்து ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று நடிகை ரோஹிணி தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியின் தலைவராக ரோஹிணி செயல்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் என்பது சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் இந்த கூட்டம் என்பது நடந்தது.
இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்களான பூச்சி முருகன், கருணாஸ் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிப்பதற்காக கூட்டப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்துடன் உடனான மோதல், நடிகர் சங்க கட்டடம் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் இந்த கூட்டம் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் விசாகா கமிட்டியின் தலைவராக நடிகை ரோஹிணி பேசினார். விசாகா கமிட்டி என்பது நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் பற்றி விசாரித்து வருவதற்காக அமைக்கப்பட்டது. தற்போது மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் புயலை வீசியுள்ளது.
மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் நிவின் பாலி உள்பட பலர் மீது பாலியல் புகார்களை நடிகைகள் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் விசாகா கமிட்டியின் தலைவராக உள்ள நடிகை ரோஹிணி அதுபற்றிய கருத்துகளை பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரோஹிணி, பாலியல் தொல்லைகள் குறித்து ஊடகங்களில் நேரடியாக தெரிவிக்க வேண்டாம். அதுபற்றி ஊடகங்களில் பேச வேண்டாம். பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை விசாகா கமிட்டியிடம் தெரிவியுங்கள். விசாகா கமிட்டியிடம் புகார் அளிக்காமல் ஊடகங்களில் பேசுவது ஏற்புடையதல்ல.
அப்படி பேசும்போது சினிமாத்துறை பற்றி பலருக்கும் தவறான எண்ணம் தோன்றலாம். திரைத்துறை மீதான நம்பிக்கை என்பதும் கெட்டுவிடும். சில யூடியூப் சேனல்கள் டிஆர்பிக்காக உங்களை (நடிகைகள்) பயன்படுத்தி கொள்வார்கள். தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் பற்றி விசாரிக்க தான் விசாகா கமிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது என பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் நடிகைகள் விசாகா கமிட்டியில் பாலியல் புகாரளிக்க ஹெல்ப்லைன் மற்றும் இ-மெயில் முகவரி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நேரில் வர முடியாதவர்கள் இந்த ஹெல்ப்லைன் மற்றும் இ-மெயில் மூலம் பாலியல் புகார்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.