பாரிஸ் நகரில் நடக்கும் உலக சுற்றுலா அரங்கில் தமிழக சுற்றுலா துறை பங்கேற்பு
Share
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஐஃப்டிஎம் டாப் ரேசா 2024 (IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கில் இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் சிலையுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் 17.9.2024 தொடங்கி 19.9.2024 வரை நடைபெற உள்ள புகழ்பெற்ற ஐஃப்டிஎம் டாப் ரேசா2024 ( IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின்அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை நிலப்பகுதிகளில் அமையப்பெற்ற புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களை விளக்கும் வகையிலான அரங்கத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் காளையை தழுவி நிற்கும் வீரனின் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யுனஸ்கோ நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பழமை மிக்க மாமல்லபுரம், தஞ்சாவூர் பெரிய கோவில், ஊட்டி மலைரயில், கொடைக்கானல், முதுமலை சரணாலயம், மெரினா கடற்கரை தொடங்கி பல நூறு கிலோமீட்டர் நீளம் கொண்ட கடற்கரை, பிச்சாவரம் சுரபுன்னை(மாங்குரோவ்) காடுகள், பல நூற்றாண்டு பழமை வாய்ந்த பல்லாயிரக்கணக்கான கோயில்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட சுற்றுலாத்தலங்கள் தமிழ்நாட்டிற்கு உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது, இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச அலைச்சறுக்கு போட்டி, ஆசிய ஹாக்கிப்போட்டி, தீவுத்திடலைச் சுற்றி நடைபெற்ற ஃபார்முலா 4 சாலை கார் பந்தயம் ஆகியவை சென்னை நகரின் பெயரை உலக விளையாட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெறச் செய்ததுடன், தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அதிக அளவில் பல்சிறப்பு மருத்துவமனைகள், அதிக எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொண்டுள்ளதன் காரணமாக குறைந்த செலவில் அதிநவீன சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதால் இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இதனால் மருத்துவச் சுற்றுலாவிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
தமிழ்நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ஐஃப்டிஎம் டாப் ரேசா 2024 ( IFTM TOP RESA 2024) சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு வகையான சுற்றுலா சிறப்புகளை தெரிவிக்கும் குறும்படங்கள் திரையிடப்பட்டன. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கத்திற்கு வருகை தந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்கப்பட்ட தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்கள் குறித்த புத்தகங்கள்,வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ், கையேடுகள், மற்றும் நினைவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து மொழிபெயர்பாளர் உதவியுடன் பிரஞ்சு மொழியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், சுற்றுலா தங்கும் விடுதி துறையினர், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கத்தினை பார்வையிட்டு தமிழ்நாட்டின் சிறப்புகளை அறிந்தனர்.