இஸ்ரேலின் யுத்தம் ஹிஸ்புல்லா உடனானது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
Share
லெபனான் மீது இஸ்ரேல் நேற்று சரமாரியாக குண்டுமழை பொழிந்தது. சுமார் 300 இடங்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஹிஸ்புல்லா உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது என்று லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக லெபனான் மக்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் காணொலி காட்சியின் வாயிலாக செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பேசிய அவர், “லெபனான் மக்களுக்கு நான் ஒரு செய்தியை கூற விரும்புகிறேன். இஸ்ரேலின் யுத்தம் உங்களுடன் அல்ல. அது ஹிஸ்புல்லா உடனானது. நீண்டகாலமாக ஹிஸ்புல்லா உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது. உங்களுடைய அறைகளில் ராக்கெட்டுகளையும், கேரஜ்களில் ஏவுகணைகளையும் வைத்திருக்கிறது. அந்த ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் நேரடியாக எங்கள் நகரங்கள் மீதும் எங்கள் குடிமக்கள் மீதும் குறி வைக்கப்பட்டன. ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இருந்து எங்கள் மக்களை பாதுகாக்க நாங்கள் இந்த ஆயுதங்களை அப்புறப்படுத்த வேண்டும். இன்று காலை முதல், ஆபத்தில் இருந்து விலகிச் செல்லுமாறு உங்களை இஸ்ரேலிய ராணுவப் படை எச்சரித்தது. இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். உங்களுடைய உயிர்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களுக்கும் ஹிஸ்புல்லா ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். லெபனானுக்கு ஹிஸ்புல்லா ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். தயவுசெய்து ஆபத்திலிருந்து இப்போதே விலகிச் செல்லுங்கள். எங்களுடைய ஆபரேஷன் முடிந்ததும், நீங்கள் உங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம்” என்று அதில் நெதன்யாகு கூறினார்.