LOADING

Type to search

இலங்கை அரசியல்

திசைகாட்டி சரியான திசையை காட்டுமா?

Share

சிறப்பு திறணாய்வு கட்டுரை

பேராசிரியர் கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி

ஏ கே டி என்று அழைக்கபடும் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதியாக மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார்.

இந்தத்தேர்தல் ஒரு மும்முனைத் தேர்தலாக இருக்கும் எனப் பலர் சொன்னபோதும் அது ஒரு இரு முனைத்தேர்தலாகவே இருந்தது.

தான் மட்டும் தான் விழுந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய வீரன், ஆபத்பாந்தவன், தான் இல்லாவிட்டால் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என்றெல்லாம் பயமுறுத்திய இலங்கையின் மக்களால் ஏற்கெனவே பல தேர்தல்களில் தோற்கடிக்கபட்டு, தன்னுடைய கட்சியையே கட்டிக்காக்க முடியாமல் சீரழித்து, கடந்த தேர்தலிலும் மக்களால் நிராகரிக்கபட்டு தேசியப்பட்டியலில் கிடைத்த ஒரு ஆசனத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் நுழைந்து, இலங்கை அரசியலமைப்பின் பலவீனம் காரணமாக ஜனாதிபதியாக மாறிய கிழட்டு நரியைத் தென்பகுதி வாக்களர்கள் இந்தத்தேர்தலிலும் கண்டுகொள்ளவே இல்லை.

ஆகவே அனுரவுக்கும் சஜித்திற்கும் இடையிலான ஒரு போட்டித் தேர்தலாகவே இது நடைமுறையில் அமைந்தது. அதிலும் சஜித்தையும் தென்பகுதி வாக்களர்கள் பெருமளவுக்கு ஓரம்கட்டியிருந்தனர். வடக்கு- கிழக்கு மற்றும் மலையகப்பகுதிகளிலேயே அவருக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன.

அதாவது, நாட்டிலுள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் சஜித் பிரேமதாச பக்கமே நின்றனர் என்பது மிகவும் தெளிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி சிங்கள பெரும்பான்மை வாக்காளர்கள் ஒரு பக்கமும், இதர தமிழ் முஸ்லிம் வாக்காளர்கள் ஒருபக்கமும் இருப்பதை இந்த தேர்தல் மீண்டும் நிலைநிறுத்தியது. மக்கள் துருவப்பட்டுள்ளனர் என்பதது மேலும் நிரூபணமாகியுள்ளது.

இப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஆணையில்லாத ஒரு பாராளுமன்றத்தைத் தொடர முடியாதென தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். எனவே ஒன்றன் பின்னர் ஒன்றாக இலங்கை இரு தேர்தல்களை சந்திக்கிறது

இனிமேல் தேர்தலில் நிற்க மாட்டேன் தேசியப்பட்டியலிலும் பாராளுமன்றம் வரமாட்டேன் என்று பதவி விலகிச் சென்ற போது ரணில் சொல்லிச் சென்றது பலருக்கு ஆச்சரியமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் 16 தடவைகளுக்கும் மேலாக அவரை மக்கள் நிராகரித்த போது இந்தத் தீரமானத்தை அவர் முன்னரே எடுத்திருந்தால் அவரது கட்சியும் காப்பாற்றப்பட்டிருக்கும் இந்தத்தேர்தல் முடிவுகள் கட்சிக்கு சாதகமாகவும் இருந்திருக்கும்.

பதவியில் இருந்த போது அவர் விடுத்த சவுடால் பேச்சுகள் இப்போது அவரை ஒரு அரசியல் கோமாளியாகக் காட்டுகிறது. ஆனாலும் அவரைப் போற்றிப் புகழ்பவர்கள் இன்னும் இல்லாமல் இல்லை.

புதவிக்கு வந்தபின் ஏற்கெனவே முடிவு செய்தபடி அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தத் தெரிவுகளில் யாரும் குறை சொல்லுமளவுக்கு இல்லை. ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிம் நபருக்கும் அமைச்சுச் செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

நிதியமைச்சின் செயலாளரும் மத்தியவங்கி ஆளுநரும் மாற்றப்படவில்லை. இது ஒரு விவேகமான அணுகுமுறை. நிதியமைச்சின் செயலாளர் ஒரு அரசியல் அடிவருடியல்ல. மத்திய வங்கி ஆளுநர் குறித்த தீவிர விமர்சனங்கள் உள்ளபோதிலும் இப்போதைக்கு விட்டு வைத்துள்ளது போலத் தெரிகிறது. அத்துடன் நிதியமைச்சில் உள்ள கலாநிதிப்பட்டம் பெற்ற ஒருவர் தான் ஐஎம் எப் உடனான பேச்சு வார்த்தைகளின் போது மிகக்கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன.

இது போன்ற அதிகாரிகள் குறித்தும் உடனடிக் கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து அப்பதவிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும் தமிழர் ஒருவர் உள்ளார். இவை குறித்தும் ஆட்சேபனைகள் இல்லை. எல்லா நியமனங்களுக்குரிய நபர்களையும் வெகு கவனமாகத் தெரிவு செய்துள்ளமை தெளிவாகத் தெரிகிறது. இவர்களிலே பல்கலைக்கழகங்களிலே இருந்தவர்கள் அதிகமானோர் உள்ளனர்.

அதேவேளை ஏற்கெனவே பல்கலைக்கழகங்களிலே முன்னைய ஆட்சியாளர்களின் நன்மைதிப்பைப் பெற்று உபவேந்தர் பதவிகளிலே உள்ளவர்கள் அனுர குமாரவின் துதிபாட ஆரம்பித்துள்ளனர். கொழும்பை மையமாகக் கொண்ட ஒரு பல்கலைக்கழக உபவேந்தரினதும் வடபுல பல்கலைக்கழகமொன்றின் உபவேந்தரினதும் முகநூல் பதிவுகளையும் காணும் போது இவர்கள் எவ்வளவு பெரிய பச்சோந்திகள் என்பது தெரிகிறது. இது போன்ற பச்சோந்திகளை சரியாக இனங்கண்டு வேலியிலேயே விட்டுவிட வேண்டும்.

அதிரடி நடவடிக்கையாக அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை காலிமுகத்திடலில் கொண்டுவந்து நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொது மக்களின் வரிப்பணம் கடந்த காலத்தில் எவ்வாறு வீணடிக்கப்பட்டது என்பதை புதிய ஆட்சியாளர்கள் காட்ட முனைகின்றனர்.

ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அனுர குமார தொடர்ச்சியாக பரப்புரைகளின் போது தான் குறிப்பிட்டு வந்த விடயங்களை மீள வலியுறுத்தினார். பல்லினத் தன்மைவாய்ந்த நாடு சட்டவாட்சி சட்டத்தின் முன் அனைவரும் சமம் போன்றவற்றை வலியுறுத்திய அவர் தமக்கு வாக்களிக்காதவர்களையும் இணைத்துக் கொண்டு பயனிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். பதவியேற்பின் போதும் அதன் பின்னரும் அவரது நடத்தை மற்றும் எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் முதல்வன் திரைப்படத்தில் வருவது போன்று சுவாரசியமாக உள்ளதாக பலரும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களின் பேர்ப்பட்டியல் விமான நிவைலயத்திற்கு அனுப்பப்பட்டு அதில் உள்ளவர்கள் வெளியேறாதவாறு திருப்பியனுப்பப் படுகின்றனர். இன்னுமொரு அதிரடியாக ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் பற்றிய விபரங்கள் ஊடகங்கள் வாயிலாக பொது மக்கள் அறியுமாறு பரப்பப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் தென்பகுதி மக்கள் மத்தியில் மட்டுமன்றி வடக்கு கிழக்குப்பகுதிகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவுத்தளம் விரிவடைவதற்கான சமிக்ஞைகள் தெளிவாகத் தென்படுகின்றன. மக்கள் மனதில் இலகுவாகத் தைக்கவல்ல பிரசார உத்திகள் எதிர்வரும் தேர்தலில் பயன்படுத்தப்படும். இனவாதம் மதவாதம் உறவினர் கவனிப்பு ஊழல் இலஞ்சம் என்று ஊறிப்போன அரசியல் கலாசாரத்தில் மக்கள் விரும்புகின்ற மாற்றங்கள் கண்ணெதிரே ஏற்படும் போது மக்கள் புருவத்தை உயர்த்துகின்றனர். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்று ஏளனம் செய்தவர்கள் இன்று அவர்களின் அதிரடி நடவடிக்கைகளை பீதியுடன் அண்ணாந்து பார்க்க வேண்டியுள்ளது. தமது வழமையான அரசியல் வியூகங்கள் எடுபடாது என்பது புரியத் தொடங்கியிருக்கிறது.

எனவே தான் மொட்டுக்கட்சி தமது கட்சியில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை எனக் கூறுகிறது. இது இந்த நூற்றாண்டின் வெகு சிறந்த நகைச்சுவையாக இருக்கும். அமெரிக்காவுக்கு அவசர அவசரமாக பறந்த காக்கா என்று அழைக்கப்படும் மொட்டுக்கட்சியின் தாபகருக்கு மிஸ்டர் டென் பேர்சன்ட் என்று ஏன் பேர்வந்தது என்பதை அக்கட்சியினருக்கு நினைவிருக்கிறதா? அப்படியானால் அவர்தான் முதலில் தூக்கப்பட வேண்டியவர்.

இப்போது யுஎன்பியும் சஜித்தின் கட்சியும் இணையுமா என்று பலர் எதிர்பார்க்கின்றனர். அவை இரண்டும் இணைந்தால் வெற்றி பெறலாம் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் ஒரு போதும் இணையமாட்டேன் என்று சஜித் முறுக்குகிறார். அவரிடமுள்ள ஏனையோர் அதே முறுக்கு முறுக்குவார்கள் என்று சொல்ல முடியாது. எனவே ஒரு கூட்டணி அமைவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.

தலைவர்கள் யாருக்கு குத்தச் சொல்கிறார்களோ அவர்களுக்க வாக்குக் குத்திப் பழக்கப்பட்ட மலையக மக்களும் இனி சற்றே சிந்திக்க வாய்ப்புண்டு. பேரம் பேசும் அரசியலுக்கு பழக்கபட்ட மலையக அரசியல் வாதிகளுடன் அனுர கதைத்திருக்க வாய்ப்புள்ளது. மலையக மக்கள் தொடர்பில் அனுரகூறிய விடயங்கள் பற்றிய ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் உலாவருகிறது. மலைவயக அரசியல் வாதிகளே கண்டுகொள்ளாத மக்கள் பிரச்சினைகளை அந்த மக்களின் அவலங்களை அனுர சொல்கிறார். அவற்றுக்குத் தீர்வு காண்பேன் என்கிறார். இதய சுத்தியோடு இந்தப்பிரச்சினை அணுகப்படு:மாயின் மலையகப்பகுதி வாக்குகள் அனுரவுக்கு கிடைக்கும்.

அனுர வந்தால் வடபகுதி மக்களுக்கு ஆபத்து அதனால் ரணிலுக்குப் போடுங்கோ சஜித்துக்குப் போடுங்கோ என்றார்கள். திலீபனின் உருவம் தாங்கிய ஊர்தி வடக்கில் பல இடங்களுக்கும் போய்வந்தது. யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை. முன்னர் நல்லூரில் உள்ள நினைவிடத்தில் விளக்கேற்றக் கூட அனுமதியில்லையே?

தேசிய மக்கள் சக்தி பற்றி வடபுலத்தில் உருவாக்கப்பட்ட பிம்பம் படிப்படியாக அறுபட ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் அங்கும் பேசிப்பேசியே வயது முதிர்ந்து போன அரசியல் வாதிகளை ஓரம் கட்டி புதிய முகங்கள் களத்திற்கு வரும் என நம்பலாம். தேர்தல் செலவுகள் குறித்த கடுமையான கட்டுப்பாடுகள் ஒரு சாதாரண குடிமகனும் தேர்தலில் போட்டியிடும் ஒரு சூழலை உருவாக்கும்.

இனவாத அரசியலை புறந்தள்ளி தெற்கிலே எடுக்கப்படும் காத்திரமான நடவடிக்கைகள் புதிய வாக்காளர் மத்தியிலே மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளமை சமூக ஊடகப்பயன்பாட்டின் மூலம் வெளிப்படுகிறது. இதனால் வடக்கிலே உள்ள அரசியல்வாதிகளும் தம்மை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒரு நாட்டின் சிந்தனைப் போக்கையே ஒரு தலைவனின் முன்னுதாரணத்தினால் மாற்ற முடியும் என்பதை நடைமுறையில் காணமுடிகிறது. இது எவ்வளவு காலத்திற்கு என்று ஒரு சிலர் முணுமுணுப்பதும் காதில் கேட்கிறது. மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி மிகப்பெரிய ஒரு சாதனையை செய்திருக்கிறது. அது மற்றைய ஆட்சியாளர் மீது மக்கள் கொண்ட கோபத்தின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொண்டாலுங்கூட அடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் மக்கள் ஆதரவைப் பெருகச் செய்திருக்கிறது.

அத்தகைய மக்கள் ஆதரவை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு நன்மைசெய்தால் தேசிய மக்கள் சக்தி அடுத்துவரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். தேசிய மக்கள் சக்தி கிடைத்த இந்த வாய்ப்பபை சரியாகப் பயன்படுத்தும் என்றே தோன்றுகிறது. தமிழர் தரப்பு மாறிவரும் இந்த சூழலை என்னவாறு கையாளப் போகிறது என்பதை இப்போது எதிர்வு கூற இயலவில்லை. பழைய பல்லவியை இனியும் பாடுவதா அது எடுபடுமா என்பதை சிந்திக்க வேண்டும். இளைய சமூகத்தின் தேவைகள் என்ன? அவர்களது அபிலாசைகள் என்ன?, வடக்கில் ஏற்கெனவே ஒரு பாராளுமன்ற ஆசனம் மக்கள் தொகை குறைந்ததனால் பறிபோய்விட்டது. இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த மாற்றங்கள் குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை இளைய சமூகத்தின் குரலாகக் கருதி செயற்படுவது நலம்.