LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் நடைபெற்ற புதுவைப் பேராசிரியர் மு. இளங்கோவன் அவர்களின் முத்தான மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

Share

புதுவைப் பேராசிரியரும் இலங்கையில் பிறந்து தமிழ்நாட்டிலும் நன்கு அறியப்பெற்றவராக இருந்த விபுலானந்த அடிகளாரின் மீது தீராத பற்றும் பக்தியும் கொண்டு அன்னார் தொடர்பான ஆய்வுப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் பெருமகனுமாகிய மு. இளங்கோவன் அவர்களின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமை 23ம் திகதி கனடா- ஸ்காபுறோவில் நடைபெற்றது.

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை மருத்துவரும் பேச்சாளரும் எழுத்தாளருமான டாக்டர் போல் ஜோசப் அவர்கள் செய்திருந்தார்.

அத்துடன் அவரே விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்

அன்று வெளியிடப்பெற்ற நூல்களான ‘இணைய ஆற்றுப்படை’ ‘இசைத் தமிழ் கலைஞர்கள். மற்றும் மணல் மேட்டு மழலைகள் ஆகிய நூல்களின் பிரதிகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அவர்களும் அவருடன் இணைந்து ஏற்பாடுகளைக் கவனித்திருந்தார்.

கனடா தொல்காப்பிய மன்றத்தின் தலைவி பேராசிரியை திருமதி செல்வநாயகி ஶ்ரீதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

முதலில் வாழ்த்துரைகள் மற்றும் விமர்சன உரைகள் ஆகியன இடம்பெற்றன. கனடா கவிஞர்கள் கழகம் – கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஆகிய இலக்கிய அமைப்புக்களின் சார்பிலும் அவற்றின் தலைவர்கள் உரையாற்றினர். கவிஞர்கள் கழகத்தின் சார்பில் திரு குமரகுரு உரையாற்றினார்.

தொடர்ந்து நூலின் பிரதிகள் சபையோருக்கு வழங்கப்பெற்றன.

அடுத்து பதிலுரையாற்றிய புதுச்சேரி பேராசிரியர் மு. இளங்கோவன் அவர்கள் தனது உரையில் பின்வருமாறு உணர்வுடன் பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு ஈழத்தமிழர்களின் மீது கடநத பல வருடங்களாக நட்பும் தொடர்பும் உண்டு. அதற்கு மேலாக கிழக்கு மாகாணத் தமிழர்களோடு கொண்ட தொடர்பினால் விபுலானந்த அடிகள் தொடர்பான சாதனைகளையும் அறிவையும் ஆற்றலையும் மதித்து இன்றும் அவரின் புகழ்பாடும் ஒருவராக நான் இன்று இருந்து வருவதற்கு காரணம் எனக்கு கிட்டிய கிழக்கிலங்கைத் தோழர்கள் என்றால் அது மிகையாகாது. விபுலானந்த அடிகளாரின் வரலாறு தொடர்பான ஆவணப் படத்தை தயாரிப்பதற்கும் எனக்கு கனடா வாழ் அன்பர்கள் பலர் உதவி செய்தார்கள். அந்தப் பணியை நான் தொடர்ச்சியாகச் செய்வதற்கு உலகின் பல நாடுகளிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றார்கள்” என்றார்..