LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் மக்கள் பொதுச்சபை ஏன் நாடாளுமன்ற தேர்தலில் இறங்கவில்லை ?

Share

– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபையானது நாடாளுமன்றத் தேர்தலில் தான் நேரடியாக இறங்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 ஆம் தேதி திருகோணமலையில் உள்ள ஆயர் இல்லத்துக்கு சொந்தமான மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் பொதுச்சபையின் சந்திப்பின்போது, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் 2,26,000 வாக்குகள் கிடைத்தன. இது ஒரு குறிப்பிட்ட செல்லக்கூடிய அடைவு. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கட்சிகள் மொத்தமாக பெற்ற வாக்குகள் 4 லட்சத்து 16 ஆயிரம். இப்பொழுது பொது வேட்பாளர் பெற்ற வாக்குகள் அதன் அரைவாசியை விடவும் கூடுதலான தொகை. எனவே தேசமாக திரள்வோம் என்று கோஷத்துக்கு அடிப்படை வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த வெற்றியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்வதென்றால் தொடர்ந்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும். அதன் மூலம்தான் வாக்களித்த மக்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு திரட்டிக் கொண்டு போக முடியும் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தமிழ் மக்கள் பொதுச்சபையானது பொதுக் கட்டமைப்பை நம்பி வாக்களித்த மக்களுக்கு பொருத்தமான வழிகாட்டலைச் செய்யாமல் இடை நடுவில் அடுத்த தேர்தலில் ஈடுபடுவதில்லை என்று கூறி பின்வாங்குகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.தமிழ் மக்கள் பொதுச்சபையானது தேர்தலில் ஈடுபட்டு நேர்மையானவர்களையும் கண்ணியமானவர்களையும் இறக்கி  மாற்றத்தை காட்ட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.தென் இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தியானது    மாற்றத்துக்கான அரசியல் அலை ஒன்றை தோற்றுவித்திருக்கும் பின்னணியில், தமிழ் மக்கள் பொதுச்சபையானது தேர்தலில் இருந்து பின்வாங்குவது தமிழர் பகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையலாம் என்று விமர்சிக்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை பங்கெடுக்கவில்லையென்றால், அது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பொருத்தமில்லாதவர்களிடம் பிரதிநிதித்துவம் போவதற்கு வாய்ப்பளித்ததாக அமைந்துவிடும்  என்றும் கூறப்படுகிறது

தமிழ் மக்கள் பொதுச்சபை இதற்கு என்ன விளக்கத்தை கூறுகின்றது?

ஒரு மக்கள் அமைப்பின் வேலை தொடர்ச்சியாக தேர்தலில் ஈடுபடுவது அல்ல. தேசத்தை திரட்டுவது என்ற கோஷத்தோடுதான் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை தலையிட்டது. அரசுடைய தரப்பினால் அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தல் களத்தை அரசற்ற  தரப்பொன்று எப்படித் தேச நிர்மாணத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற ஒரு பரிசோதனைதான் பொது வேட்பாளர். ஜனாதிபதித் தேர்தல் களமானது அவ்வாறான ஒரு பரிசோதனையை செய்வதற்கு வசதியானது. அங்கே பொது வேட்பாளர் ஒரு குறியீடாக முன்நிறுத்தப்பட்டார். அவருக்கு விழும் வாக்குகளை அவர் ஒரு கண்ணாடி ஒளிக் கதிர்களை பிரதிபலிப்பது போல வாக்களித்த மக்களுக்கு திருப்பி கொடுத்தார்.அந்த மக்களை அவர் ஒரு அணியில் திரட்டினார். அப்படிப் பார்த்தால் அரசாங்கம் அறிவித்த ஒரு தேர்தலில் ஒரு சிறிய மக்கள் கூட்டம் எப்படி புத்திசாலித்தனமாகவும் தீர்க்கதரிசனமாகவும் புதுமையாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு அது ஒரு உதாரணமாக அமைந்தது. இலங்கைத் தீவில் மட்டுமல்ல இந்த பிராந்தியத்திலேயே அது ஒரு புதுமையான முன்னுதாரணம்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் களம் அத்தகையது அல்ல. அங்கே வேட்பாளர்கள் குறியீடாக நிறுத்தப்பட மாட்டார்கள். ஒவ்வொரு வேட்பாளரும் தான் செலவழிக்கும் காசையும் உழைப்பையும் தனக்கேயான முதலீடாகத்தான் கருதுவார்.அங்கே குறிப்பாக விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைக்குள்  சுயநலமும் அது சார்ந்த போட்டியுந்தான் அதிகமாக இருக்கும்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒரு குறியீடு. ஆனால் பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் எல்லாருமே தங்களை முன் நிறுத்துவார்கள். இதனால் கட்சிகளாகவும் வேட்பாளர்களாகவும் தமிழ் வாக்குகள் சிதறும். அதாவது தேசத் திரட்சி சிதறக்கூடிய வாய்ப்புகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தல் களம் இது.

இப்படிப்பட்ட ஒரு போட்டிக் களத்தில் தேசத்தைத் திரட்டுவது சவால்கள் மிகுந்தது. ஒரு பலமான கட்சி தனது வேட்பாளர்களை எங்கும் நிறுத்தி அதன் மூலம் தேசத் திரட்சியை பாதுகாப்பது வேறு. ஆனால் ஐந்து மாத குழந்தையான தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற அமைப்பும் இரண்டு மாதக் குழந்தையாகிய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பும் அதைச் செய்வது கடினம். அதனால் தமிழ் மக்கள் பொதுச் சபை தேர்தல் நடவடிக்கைகளில் இருந்தும் பின்வாங்கியது.

மேலும் பொதுச்சபை ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு விட்ட ஒரு அறிக்கையில் மற்றொரு விடயம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தேசத்தைக் கட்டி எழுப்பும் பணியில் தேர்தல் ஒரு பகுதி மட்டும் தான்.தனிய தேர்தல்களால் மட்டும் தேசத்தை கட்டி எழுப்ப முடியாது. அந்த அடிப்படையில் தொடர்ச்சியாக தேர்தலில் ஈடுபடுவது ஒரு மக்கள் கட்டமைப்பின் பிரதான இலக்காக இருக்க முடியாது. அதை கட்சிகள் தான் செய்ய வேண்டும். அல்லது மக்கள் இயக்கத்தால் வழி நடத்தப்படும் ஒரு கட்சி அதைச் செய்தால் உன்னதமாக இருக்கும்

இப்போதுள்ள பொதுக் கட்டமைப்பு அந்த வளர்ச்சியை இன்னமும் அடையவில்லை. அடுத்தடுத்து தேர்தல்கள் வரும்பொழுது அதை எதிர் கொள்வதற்கு கட்டமைப்புப் பலமும் நிதிப் பலமும் வேண்டும்.அது தமிழ் மக்கள் பொதுச் சபையிடம் இல்லை என்று தெரிகிறது.

அத்துடன் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைக் குறித்த  ஒரு மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் பொதுச்சபை கருதுவதாகத் தெரிகிறது.அந்த மீளாய்வு செய்யப்படாத ஒரு பின்னணிக்குள் மற்றொரு தேர்தலை எதிர்கொள்வது புத்திசாலித்தனமானது அல்லவென்று பொதுச் சபை சுட்டிக்காட்டுகின்றது. ஒரு தேர்தலில் கட்சிகளோடு சேர்ந்து உழைத்ததில் பெற்ற நன்மை தீமைகள், அது பற்றிய தொகுக்கப்பட்ட அனுபவம் என்பவற்றிலிருந்து கற்றுக் கொண்டால்தான் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கலாம். ஆனால் அதைக் கற்றுக் கொள்வதற்கு அவகாசம் இங்கே கிடைக்கவில்லை. ஒரு தேர்தல் முடிந்த கையோடு அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதை  ஒரு மக்கள் அமைப்பு எதிர்கொள்வதில் அடிப்படையான வரையறைகள் இருக்கும்.

மேற்சொன்ன காரணங்களை முன்வைத்து தமிழ் மக்கள் பொதுச்சபையானது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தது. பொதுச் சின்னமாகிய சங்கையும் பங்காளிக் கட்சிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அது வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டு சங்குச் சின்னத்தைக் கோரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியது.

அவ்வாறு பங்காளிக் கட்சிகளில் ஒன்று அந்த சின்னத்தைக் கோரிப் பெறுவது என்பது பொதுக்கட்டமைப்பு உருவாக்கிய பொழுது பொதுச் சபையும் கட்சிகளும் இணங்கிக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறானது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் பொதுச் சின்னமானது பொதுநிலைப்பாட்டுக்கு உரியது என்றும் அதனை தனி நிலைபாட்டுக்கு பயன்படுத்த முடியாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இப்பொழுது பொதுச் சபை தேர்தலில் நேரடியாக ஈடுபடாது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் தமிழ் மக்கள் கூட்டணியும் கூட்டாக தேர்தலை கேட்கப்போவதில்லை. எனவே நடைமுறையில் பொது கட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டாக இப்பொழுது இல்லை.

மேலும்,தேர்தலில் பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த மக்கள் அமைப்பும் கட்சிகளும் மட்டும் உழைக்கவில்லை. மேலதிகமாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே உழைத்திருக்கிறார்கள். வடக்கில் பரவலாக தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டார்கள். கிழக்கிலும் அப்படித்தான். மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் சாணக்கியனுக்கு எதிரான அணி முழுமையாக மேடையில் காணப்பட்டது. அவர்கள் பகிரங்கமாக அரியநேத்திரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களோடு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரமுகராகிய அருண் தம்பி முத்துவும் காணப்பட்டார்.

இதைத் தவிர யாழ்ப்பாணத்தில் பொதுச்சபைக்குள் அங்கும் வகிக்காத மக்கள் அமைப்புகளும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டன. எனவே அந்த வெற்றி ஒரு கூட்டு வெற்றி. தமிழ் மக்கள் பொதுச்சபையும் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய ஒரு மக்கள் திரட்சிக்கு கிடைத்த வெற்றி. அது ஐக்கியத்துக்கு மக்கள் காட்டிய ஆதரவு. அந்த ஆதரவுத் தளத்தைப் பேணுவது என்பது ஐக்கியத்தை விசுவாசமாகப் பேணுவதில்தான் தங்கியிருக்கின்றது. ஆனால் பொதுச் சின்னம் என்ற விவகாரம் அந்த ஒற்றுமையை சோதனைக்கு உள்ளாக்குமா