LOADING

Type to search

சினிமா

வடிவேலு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவு – நீதிமன்றம்

Share

நடிகர் சிங்கமுத்து யூ-டியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில். “பல்வேறு யூ-டியூப்சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னைப் பற்றி துளி கூட உண்மையில்லாத பல பொய்களைக் கூறி, தரக்குறைவாக பேசி உள்ளார். எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிங்கமுத்து தரப்பில், தான் அவதூறாக பேசியதாக மட்டுமே வடிவேலு கூறியிருக்கிறாரே தவிர எந்த மாதிரி அவதூறு என்று குறிப்பிடவில்லை என்றும், தான் திரைத்துறை சார்ந்த கருத்து மட்டுமே தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வடிவேலு தரப்பில், இந்த வழக்கை தாங்கள் கோர்ட்டில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது என்றும் ஆனால், அதன்பிறகும் கூட யூ-டியூபில் சிங்கமுத்து தரப்பில் தங்களைப்பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து சிங்கமுத்து தரப்பில், அப்படி எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்றும் தங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், அதுவரை சிங்கமுத்து, வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும், ஏற்கனவே சிங்கமுத்து கூறியது யூ-டியூபில் இருப்பதால் அதனை நீக்குமாறு அந்த சேனலுக்கு கடிதம் எழுதுமாறு உத்தரவிட்டார்.