நம்பிக்கையை தரும் அரசியலமைப்பு சட்டம் – பிரியங்கா பேச்சு
Share
‘அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது’ என நாடாளுமன்றத்தில் பிரியங்கா பேசினார். இது நாடாளுமன்றத்தில் அவரது முதல் உரை.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25ம்தேதி தொடங்கியது. அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, மக்களவையில் வயநாடு எம்.பி. பிரியங்கா பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது. அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி பங்களிப்புடன் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. எவ்வளவோ சவால்கள் இருந்தும் மகளிர் போராட அரசியல் சாசனம் தைரியம் தருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் பலனால் எளியோர் போராட முடிகிறது. மத்திய அரசு வாஷிங் மெஷின் அரசு. ஹிமாச்சல்லில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தது யார்? கோவா அரசை கவிழ்த்தது யார்? எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக நண்பர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையை பயன்படுத்தி தவறான வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
தனியார்மயமாக்கல் உள்ளிட்டவை மூலம் இந்த அரசு இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மக்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தலில் தெரிந்து கொண்டார்கள். கோடிக்கணக்கான இந்தியர்களின் போராடி வருகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நமது அரசியலமைப்பு சட்டம் தருகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம், அது நீதி, ஒற்றுமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கவசம் என்பதை நான் புரிந்துகொண்டேன். வருத்தமான விஷயம் என்னவென்றால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக் கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளனர். இவ்வாறு பிரியங்கா பேசினார்.