வலிகாமம் வலய பாடசாலை மாணவ முதல்வர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
Share
Ratnam Foundation நிறுவனத்தின் நிதி அனுசரணையில், Visions Global Empowerment நிறுவனத்தினால் வலிகாமம் வலயத்திற்கு உட்பட்ட ஐந்து பாடசாலைகளின் மாணவ முதல்வர்களுக்கான ஐந்து நாட்கள் தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறை சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில், கடந்த மார்கழி மாதம் 9 முதல் 13-ம் திகதி வரை நடாத்தப்பட்ட இந்த தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறையில் யா/வட்டு இந்துக் கல்லூரி, யா/வட்டு மத்திய கல்லூரி, யா/சுழிபுரம் விக்டோரியா கல்லூரி, யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம் மற்றும் யா/அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் பாடசாலைகளைச் சார்ந்த 36 மாணவர்த் தலைவர்கள் தலைமைத்துவம் சார்ந்த பங்கேற்றல் முறை செயற்பாடுகள் வழியில் பயிற்றுவிக்கப்பட்டனர்.
மாணவர்களை சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பல், தலைமைத்துவம், குழுச் செயற்பாடு, தொடர்பாடல், திட்டமிடல், நேர முகாமைத்துவம் மற்றும் முன்வைப்பு திறன் சார்ந்த திறன் விருத்திக்கும், தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை தொடர்பான ஊக்குவிப்பிற்க்கும் இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம். இந்த பயிற்சிப் பட்டறையில், பாடசாலை மாணவ முதல்வர்கள் சிறந்த முறையில் தங்களது தலைமைத்துவம் சார்ந்த துலங்கல்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஒவ்வொரு மாணவரும் தமக்கான சுயவிருத்தி திட்டம் (Self-Development Plan) ஒன்றை வடிவமைத்தமை இப்பயிற்சி நெறியின் சிறப்பை மேம்படுத்தியது.
தங்களது தலைமைத்துவத் திறனைப் மேம்படுத்துவதற்காக, பயிற்றுவிக்கப்பட்ட மாணவ முதல்வர்கள், பாடசாலை சார்ந்த சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ஐந்து பாடசாலை சார்ந்த சமூக செயல் திட்டங்களை உருவாக்கியுள்ளனர். தத்தம் அதிபர்களின் வழிகாட்டலில் சமூக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தங்களது தலைமைத்துவ திறனை இனிவரும் நாட்களில் வெளிபடுத்த உள்ளனர். இவ்வாறு, சிறந்த தலைவர்களாக எதிர்காலத்தில் அவர்கள் உருவாக்கும் மாற்றங்கள், மிகச்சிறந்த விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்துவதாக இருக்கும்.
வலிகாமம் வலயத்தின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புடன், கலாநிதி.இரட்ணம் நித்தியானந்தன் அவர்களின் வழிகாட்டலில் நடாத்தப்பட்ட இந்த பயிற்சி பட்டறையில், விசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.ந.தெய்வேந்திரராஜா, பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அ.மயூரன் ஆகியோர் பிரதம வளவாளர்களாகவும், விசன்ஸ் நிறுவனத்தின் நான்கு பயிற்சியாளர்கள் வளவாளர்களாகவும் செயற்பட்டு பயிற்சியினை முன்னெடுத்திருந்தனர்.