போருக்குள் வாழ்ந்த எழுத்தாளர் ஆ.ந.தீயின் மூன்று நூல்கள் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் வெளியிடப்பெற்றன
Share
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
தேசத்திற்கான காலக்கடமையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து நின்ற எழுத்தாளர் ஆ.ந.தீ அவர்களின் மூன்று நூல்களின் வெளியீடு கடந்த 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 1530 மணிக்கு சிட்னியில் வென்ட்வேத்வில் சமுதாய மண்டபத்தில் நடைபெற்றது.
அவுஸ்திரேலியா தமிழ்த்தாய் பதிப்பக வெளியீடாக ‘காலத்தின் பரிசு’ எனும் சிறுகதை நூலும், ‘சாகாத சான்று’ எனும் குறும் புதின நூலும் ‘பகலாகிய இரவுகளும் இரவாகிய பகல்களும்’ எனும் தலைப்பில் பொதுக்கட்டுரை ஆக்க நூலும் இந்நிகழ்வில் வெளியாகியது.
எழுத்தாளர் ஆ.ந.தீ அவர்களும், அவரது துணையும் அவர்களின் மகனும் போர் வாழ்வின் வலிகளைக் கடந்தும் தொடரும் இடர்களை எதிர்கொண்டபோதும், விடுதலைப்
பணியாகக் காலத்தின் பதிவுகளை மூன்று நூல்களாக வெளியீட்டு வைக்கின்றனர்.
எழுத்தாளர் ஆ.ந.தீ அவர்களால் போருக்குள்ளும் போரின் பின்னரும் எழுதிய படைப்புக்களின் வெளியீடான இந்நூல் வெளியீட்டு விழாவில் பெருந்திரளான சிட்னி மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் பற்றாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த முப்பதாண்டு காலமாக எழுதிவரும் படைப்பாளியான ஆ.ந.தீ என்ற பெயரில் மட்டுமன்றிக் கற்பகன், வர்ணன், ஆ.ந.பொற்கோ, பொலிகையூரான், நகுலா ஆனந்தன், தீவண்ணன், வைகை ஆகிய புனைபெயர்களிலும் எழுதி வந்துள்ளார். தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மீதான பெருவிருப்பே இவரது படைப்புககளின் கருக்களாய் உருப்பெற்றிருக்கிறது.
இவரது எழுத்து நடை தன்பாட்டில் அமைதியாக ஓடும் நதியைப் போன்று எளிமையானது. நல்ல தமிழ் வார்த்தைகள் இக்கதைகளுக்கு வசீகரத்தைத் தருகின்றன. நல்ல அழகான சொற்றொடர்கள் இயல்பாக வந்து விழுகின்றன. அன்றாடம் பாவனையில் பேசப்படுகின்ற பிற மொழி வார்த்தைகளைக் கூட தூய தமிழில் எழுதியது பாராட்டுக்குரியது. தனது எழுத்தாற்றலால் ஒவ்வொரு பாத்திரத்தையும் நம் மனதுக்கு நெருக்கமாக உணர வைத்திருக்கிறார் என மூத்த தமிழ் பெண் எழுத்தாளர் திருமதி தாமரைச்செல்வி தெரிவித்துள்ளார்.
நாம் கடந்து வந்த வாழ்வை, நாம் சந்தித்த மனிதர்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கச் செய்யும் படைப்புகள் இவை. அந்த வகையில் இக்கதைகள் ஒரு காலத்தின் கதைகள். ஒரு காலத்தின் துயரங்கள். பல ஆண்டுகளாக எமது மண் சந்தித்த பல துயர வரலாற்றையும் அதனால் எழுந்த வாழ்வியல் கோலங்களையும் தியாகங்களையும் பேசும் படைப்புகள் என மூத்த தமிழ் பெண் எழுத்தாளர் திருமதி தாமரைச்செல்வி தெரிவித்துள்ளார்.