தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share
கடந்த புதன்கிழமை தமிழரசுக் கட்சி அதன் 75 வது ஆண்டை நிறைவு செய்தது. ஆனால் கொண்டாடவில்லை. அதைக் கொண்டாட முடியவில்லை என்பதனை அந்தக் கட்சியின் அபிமானிகள் முகநூலில் பதிவு செய்கிறார்கள். ஏன் கொண்டாட முடியவில்லை?
ஏனென்றால் கட்சிக்கு தலைமை யார் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில் நிற்கின்றது. கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் நடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தைத் தொகுத்துப் பார்த்தால் கட்சி இப்பொழுதும் ஒரு இறுக்கமான, உருகிப் பிணைந்த கட்டமைப்பாக இல்லை. கட்சிக்குள் எதிரெதிர் குழுக்கள் தோன்றி விட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சிப் பிரமுகர்கள் சுவரொட்டிகளில் ஒன்றாகத் தோன்றினார்கள். ஆனால் உள்ளூரில் இறங்கிப் பிரச்சாரம் செய்யும் பொழுது ஒருவர் மற்றவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டார்கள். வடக்கிலும் கிழக்கிலும் இதுதான் நிலைமை. கட்சிக்குள் தோன்றியிருக்கும் குழுக்களுக்கு இடையிலான பகைமையானது, வெளியாட்களுக்கும் கட்சிக்கும் இடையிலான பகைமையை விடவும் மூர்க்கமானதாக, கூர்மையானதாக காணப்படுகின்றது.
இந்தக் குழுக்களுக்கு யார் காரணம்? சந்தேகமே இல்லை. சம்பந்தரும் சுமந்திரனும் மாவையுந்தான் முதன்மைக் காரணம். சம்பந்தரும் சுமந்திரனும் மாவையும் செய்த தவறுகளைக் கண்டும் காணாமல் இருந்த அல்லது தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டிருந்த மூத்த உறுப்பினர்களும் காரணம்.75 ஆண்டு காலக் கட்சி எங்கே நிற்கின்றது என்பதற்கு தந்தை செல்வாவின் நினைவுத் தூபியே சாட்சி. ஆண்டின் பெரும்பாலான காலம் அந்தத் தூபியைச் சூழ்ந்து பற்றைகள் படர்ந்திருக்கும். தந்தை செல்வாவின் சிலைக்கு சம்பிரதாய பூர்வமாக வணக்கம் செலுத்தும் கட்சிக்காரர்களுக்கு சிலையைச் சூழ்ந்திருக்கும் பற்றைகளும் அந்த வளாகத்தின் துருப்பிடித்த வாயிற் கதவும் உறுத்துவதேயில்லை.
75 ஆண்டு காலம் என்பது ஏறக்குறைய ஒரு மனிதனின் முழு ஆயுளுக்கு கிட்ட வரும். 75 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி எதைச் சாதித்திருக்கிறது? என்பதைக் குறித்த ஒரு தொகுக்கப்பட்ட பார்வை அவசியம்.
தமிழரசுக் கட்சியின் தொடக்கம் புரட்சிகரமானது. மலையகத் தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கும் விடயத்தில் அது முற்போக்கான முடிவை எடுத்தது. மலையாகத் தமிழர்களை நாடற்றவர்கள் ஆக்கியது என்பது தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் தொடக்கங்களில் ஒன்று. அந்த இடத்தில் தமிழரசுக் கட்சி சரியான நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் அதற்காக அவர்கள் மலையகத் தமிழர்களையும் அரவணைத்துக் கொண்டு குறிப்பிட்டுச் செல்லக்கூடிய தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. குரொம்சி கூறுவது போல “ நீதியான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டும் போதாது. வரலாற்றின் மீது நிர்ணயகரமான விதங்களில் இடையூடு செய்ய வேண்டும்.” ஆனால் தமிழரசுக் கட்சி மலையகத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களின் விடயத்திலும் அவ்வாறு வரலாற்றின் மீது நிர்ணயகரமான தலையீட்டைச் செய்யவில்லை.
ஆங்கிலத்தில் அது சமஸ்டிக் கட்சி என்று அழைக்கப்பட்டது. ஆனால் கடந்த 75 ஆண்டுகளாக அந்தத் தீர்வை அவர்களால் பெற முடியவில்லை. ஏன் முடியவில்லை? இப்பொழுதும் அந்த தீர்வை பெறுவதற்கான வழிவகைகள் என்ன? அது தொடர்பான தெளிவான வழி வரைபடம் அந்தக் கட்சியிடம் உண்டா?
தமிழரசுக் கட்சிக்கு எப்பொழுதும் இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று வாக்களித்த மக்களுக்கு நெருக்கமான முகம். இன்னொன்று கொழும்புக்கு நெருக்கமான முகம். இந்த இரண்டு முகங்களும் தமிழரசுக் கட்சிக்குள் காலாகாலம் இருந்து வந்துள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளராகிய பேராசிரியர் ராமகிருஷ்ணன், அவருடைய நண்பர்களுக்குச் சொல்லுவாராம், “ஒரு பனங்காட்டானை தலைவர் ஆக்குங்கள் அவன் வாக்காளர்கள் சொல்வதைக் கேட்பான். கொழும்பானைத் தலைவன் ஆக்கி விடாதீர்கள்” என்று.
பனங்காட்டான் என்ற வார்த்தை யாழ்ப்பாணத்தவர்களை மட்டும் குறிக்கவில்லை. உள்ளூர் உணர்வுகளைக் குறிக்கின்றது. அதை கோட்பாட்டு அடிப்படையில் சொன்னால், தமிழ்த் தேசிய உணர்வுகளைக் குறிக்கின்றது. வாக்காளர் மைய நோக்குநிலை, கொழும்பு மைய நோக்கு நிலை இரண்டினதும் சேர்க்கைதான் தமிழரசுக் கட்சி.
சம்பந்தரின் காலத்தில் கட்சி கொழுப்பை நோக்கி அதிகமாகச் சாய்ந்தது. ஆயுதப் போராட்டத்தின் அணுகுமுறைகள் தவறானவை என்று சம்பந்தர் கருதினார். ஆயுதப் போராட்டம் கொழும்பைப் பகை நிலைக்கு தள்ளிவிட்டது என்றும் அவர் நம்பினார். எனவே சிங்கள மக்களை அரவணைக்க வேண்டும், சிங்கள மக்களின் பயங்களை அகற்ற வேண்டும், அதன் மூலம்தான் ஒரு தீர்வைப் பெறலாம் என்றும் சம்பந்தர் நம்பினார். அந்த அடிப்படையில் அவர் சிங்கள மக்களின் பயங்களைப் போக்குவதற்காக ஆகக் கூடிய மட்டும் விட்டுக் கொடுத்தார். “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காணவேண்டும். அவரைப்போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் உரையாற்றியது சரி.
ஆனால் சம்பந்தர் அடியொட்ட வளைந்து கொடுத்தும் இனப்பிரச்சனைக்கான தீர்வைப் பெற முடியவில்லை. அது மட்டுமல்ல அதன் விளைவாக அவர் கட்சியின் பலத்தையும் உடைத்து விட்டார். ஏறக்குறைய ஒரு தோல்வியுற்ற தலைவராகவே அவர் இறந்தார். அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய வாரிசுகளே அவர் சொன்னதைக் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்த தீர்வையும் பெற முடியவில்லை. கட்சியின் கூட்டுணர்வையும் கட்டிக்காக்க முடியவில்லை. கட்சிக்குள் இப்பொழுது தோன்றியிருக்கும் குழுக்கள் சம்பந்தரின் அரசியலால் உற்பத்தி செய்யப்பட்டவைதான். விளைவாக கட்சி இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கொழும்பை நோக்கிச் சுதாகரிக்கும் சிந்தனை தோற்கடிக்கப்பட்டது. சுமந்திரன் அவருடைய கட்சி ஆட்களால் நிராகரிக்கப்பட்டார். வெளிப்படையாக அவர் அந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தாலும், நடைமுறையில் அவர் அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளவில்லை என்பதைத்தான் பின்னர் நடந்தவை நிருபித்தன. இந்த ஆண்டு சுமந்திரனை பொறுத்தவரை தோல்விகரமான ஆண்டு. ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்காரர்கள் அவரைத் தோற்கடித்தார்கள். ஆண்டின் முடிவில் தமிழ் மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள். ஆனால் தோல்விகளில் இருந்து அவர் பாடங் கற்றிருக்கிறாரா?
உள்ள கட்சிகளில் தமிழரசுக் கட்சிதான் தமிழர் தாயகம் எங்கும் பரவலான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது. தனி ஒரு கட்சியாக இம்முறை தமிழரசு கட்சிதான் அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது. அதை ஒரு வெற்றி என்று சுமந்திரன் உட்பட பலரும் கருதுவதாகத் தெரிகிறது. தவறு. தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது. ஒரு தேசமாகத் தமிழ் மக்கள் மேலும் பலவீனமடைந்திருக்கிறார்கள்.
கடந்த 15 ஆண்டுகால தமிழ் அரசியலில் பிரதான கட்சியாகவும் ஏறக்குறைய தீர்மானிக்கும் கட்சியாகவும் தமிழரசு கட்சிதான் இருந்து வந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் அதைப் பெருமையோடு கூறிக் கொள்கிறார்கள். எனவே கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்த் தேசிய ஆசனங்கள் ஏறக்குறைய அரைவாசி அளவுக்கு குறைந்தமைக்கு யார் பொறுப்பு? மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மூத்த அரசியல்வாதியான சிவஞானத்தைப் பார்த்து அர்ஜுனா நீங்கள் யார் என்று கேட்கும் நிலைமை ஏன் தோன்றியது? 22 ஆசனங்களில் இருந்து பத்தாகி விட்டது. அந்தத் தோல்வியை சுய விசாரணை செய்வதா? அல்லது ஒரு தனிப் பெருங் கட்சியாக கிடைத்த ஆசனங்களைக் கொண்டாடுவதா?
அந்த வெற்றியைக் கொண்டாடுவது என்பது தேசத்தின் பின்னடைவை விளங்கிக் கொள்ளாமையே. தேசத்தைத் திரட்டாவிட்டால் கட்சிகளையும் திரட்ட முடியாது என்பதனை இம்முறை நாடாளுமன்றத் தேர்தல் எல்லாத் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் நிரூபித்திருக்கிறது.
ஆனால் தமிழரசுக் கட்சியோ அல்லது சுமந்திரனோ தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. அண்மையில் வவுனியாவில் நடந்த மத்திய செயற் குழுவின் கூட்டம் அதைத்தான் உணர்த்துகின்றது.
அப்படிப்பட்டதோர் கட்சிச் சூழலில், சமஸ்ரியை அடையாத 75ஆவது ஆண்டு; கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஒர் ஆண்டு; தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் மேலும் சுருங்கிப் போன ஒர் ஆண்டு, வெற்றியாண்டா? தோல்வியாண்டா?