“கூரன் திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும்” – மேனகா காந்தி கோரிக்கை
Share
‘கூரன்’ திரைப்படத்திற்கு அரசு வரிவிலக்கு வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
தெரு நாய்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இதில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது, “இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தத் திரைப்பட விழாவுக்கு என்னை அழைத்த போது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டேன். திரைப்படத்தில் சிறிய திரைப்படம் என்று எதுவும் இல்லை. இது பெரிய கருத்தை, சிந்தனையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அனைத்து உயிரினங்களும் ஒன்று என்று சொல்கிறது. உயிரினம் ஒவ்வொன்றும் சோகம், மகிழ்ச்சி, பயம் என அனைத்தையும் உணர்கிறது. மேலும், அவை அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறது.
இந்த படம் நகைச்சுவை நிறைந்தது. மென்மையான உணர்வுகளைக் கூறுகின்ற நல்ல படம். இதற்கு வரி விலக்கு வழங்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு முக்கியமான யோசனை. இந்த அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி” இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.